உள்நாட்டு யுத்தத்தால் கனடா வந்த பெண்ணுக்கு புலம்பெயர்தல் அலுவலகம் கொடுத்த ஏமாற்றம்
கனடா
23 வயதான ஈடன் செபீன் ( Eden Zebene) என்ற இளம்பெணுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட அன்றே ஒரு அதிர்ச்சியையும் கொடுத்தது கனேடிய புலம்பெயர்தல் அலுவலகம்.
எத்தியோப்பியாவிலிருந்து உள்நாட்டு யுத்தத்துக்குத் தப்பி கனடாவுக்கு புலம்பெயர்ந்த குறித்த பெண் பணி அனுமதி பெற 16 மாதங்களாக புலம்பெயர்தல் அலுவலகத்துக்கு சென்று வந்துள்ளார்.
அகதி நிலை கோரியிருந்த அவர் 16 மாதங்கள் தனது தகுதி நேர்காணலுக்கான அழைப்புக்காக காத்திருந்த நிலையில் இறுதியாக அவருக்கு பணி அனுமதி கிடைக்கின்றது, கூடவே ஏமாற்றமும் காத்திருந்தது.
பணி அனுமதி
அவரது பணி அனுமதியில், காலாவதி திகதி ஓகஸ்ட் 6, 2022 என குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, அவருக்கு என்று பணி அனுமதி வழங்கப்பட்டதோ, அன்றே அது காலாவதியாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பாரிய ஏமாற்றத்துக்கும் உள்ளாகியுள்ளார்.
எத்தியோப்பியாவில் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தனது வீடும் சொத்துக்களும் தீவைத்து எரிக்கப்பட்டதால் உயிர் தப்ப கனடாவுக்கு வந்ததாக தெரிவித்த குறித்த பெண் புலம்பெயர்தல் அலுவலகம் செய்த ஒரு தவறால் வேலைக்கும் செல்ல முடியாமல், படிக்கவும் முடியாமல், மருத்துவ உதவியும் பெற முடியாமல் தவிக்கிறார்.
கனடாவுக்கு தப்பி வந்து இப்போது பாதுகாப்பாக உணர்வதாக தெரிவிக்கும் ஈடன் செபீன், கணினி அறிவியல் கற்கும் ஆசையுடன் தான் வந்ததாகவும், பகுதி நேரப் பணி செய்ய விரும்புவதாகவும், ஆனால், முறையான அனுமதி இல்லாததால் தன்னால் எதுவும் செய்ய இயலாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதாகவும் தெரிவிக்கிறார்.
மேலும், ஈடன் செபீன் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் ஆனால், மருத்துவ உதவி பெறுவதற்கான அனுமதி இல்லாததால் அவதியுறுகிறார் எனவும் ஒருவரது தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பிலிருப்பவர்கள் இப்படியாக தவறு செய்வார்கள் என ஈடன் செபீன் இன் கணவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
தன் மனைவி படும் அவஸ்தையைப் பார்க்க கஷ்டமாக இருப்பதாகத் தெரிவிக்கும் அவர், தனது மனைவிக்கான ஸ்பான்சர் விண்ணப்பத்தையாவது வேகமாக பரிசீலிக்குமாறு கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

