வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு
வடக்கு மாகாண இடமாற்றக் கொள்கையை வினைத்திறனாக மாற்றியமைப்பதற்கும் ஆசிரியர் இடமாற்றங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.07.2025) ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
ஆசிரியர் இடமாற்றச் சபையில் பதிவு செய்யப்பட்ட இயங்கு நிலையிலுள்ள தொழிற்சங்கங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கவேண்டும் எனவும், அனுமதியற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இடமாற்றச் சபையில் இடம்பெற்றிருந்தால் அதனூடாக வழங்கப்படும் இடமாற்றம் சட்டரீதியாக சவாலுக்கு உட்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டினார்.
சேவையின் தேவை கருதிய இடமாற்றங்கள்
வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் சகல வலயங்களுக்கும் அனுமதிக்கப்பட்ட தொழிற்சங்களின் விவரங்களை அனுப்பவேண்டும் எனவும் அவர் கோரினார்.
தேசிய இடமாற்றக் கொள்கையுடன் வடக்கு மாகாண இடமாற்றக் கொள்கை சில இடங்களில் ஒத்துச் செல்லவில்லை. இருப்பினும் வடக்கு மாகாண இடமாற்றக் கொள்கை இன்னமும் வினைத்திறனாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய ஆசிரிய சேவைச் சங்கத்தினர், சேவையின் தேவை கருதிய இடமாற்றங்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்களால் வழங்கப்படும்போது அது தொடர்பில் 14 நாள்களுக்குள் இடமாற்றச் சபைக்கு அறிவிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
அதை நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்களை அறிவுறுத்தினார். இடமாற்றங்களின் போது அரசியல் தலையீடுகளுக்கு அனுமதியளிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்த ஆசிரியர் சேவைச் சங்கத்தினர் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளை துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும் ஆசிரியர்களால், அதிபர்களால் திணைக்களங்களில் ஒப்படைக்கப்படுகின்ற ஆவணங்களுக்கு பெற்றுக்கொண்டமைக்கான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கப்படவேண்டும் என முன்வைத்த கோரிக்கையை செயற்படுத்துவதாக கல்வி அமைச்சின் செயலர் குறிப்பிட்டார்.
அதிபர்கள் இடமாற்றக் கொள்கை
அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டு அதனைப்பொறுப்பேற்காதவர்கள் தொடர்பான விடயமும், அதிபர் வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அதனை நிரப்பும் வகையில் அவர்களை உள்வாங்குமாறும் அதிபர் சேவைச் சங்கப் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
அதிபர்கள் இடமாற்றக் கொள்கை தயாரிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.
வன்னிப் பிரதேசத்திலுள்ள வலயங்களிலிருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் பதிலீடாக வரவேண்டிய ஆசிரியர்கள் இன்னமும் அங்கு வராமையால் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
இடமாற்றம் வழங்கப்பட்டவர்களை எதிர்வரும் புதன்கிழமையுடன் தற்போதுள்ள வலயங்களில் சேவையை முடிவுறுத்தி புதிய நிலையங்களில் பொறுப்பேற்பதற்கான ஒழுங்குகளை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேற்கொள்ளவேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.
அதிபர், ஆசிரியர்கள் பற்றாக்குறை
அரசாங்கம் எதிர்காலத்தில் பிரதேச மாணவர்களின் கல்வியைப் பாதிக்காத வகையில், கொத்தணிப் பாடசாலை முறைமைய வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இதனூடாக அதிபர், ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பான விவகாரத்தை தணிக்க முடியும் என நம்புவதாகவும் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டார்.
இதேவேளை, மாணவர்களின் கல்வியை வளர்த்தெடுப்பது தொடர்பிலேயே சிந்திக்கவேண்டும் எனவும், ஆசிரியர்கள், அதிபர்கள், அதிகாரிகள் தங்கள் சுகபோகங்களையும் வசதி வாய்ப்புக்களையும் நோக்கமாகக்கொண்டு செயற்படக்கூடாது என்றும் கௌரவ பிரதியமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் கேட்டுக்கொண்டார்.
மாணவர்களின் கல்விக்காக சில விட்டுக்கொடுப்புக்களையும், கஷடங்களையும் ஆசிரியர்கள், அதிபர்கள், அதிகாரிகள் தாங்கிக் கொள்ளவேண்டும் எனவும் அவ்வாறில்லாவிட்டால் வடக்கு மாகாணத்தை கல்வியில் உயர்த்துவது கடினம் என்றம் குறிப்பிட்டார். இதேவேளை, பாடசாலைக்கான அனுமதிகளில் சில இடங்களில் பாரபட்சம் காட்டப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அவ்வாறானதொரு விடயத்துக்கு தயவுதாட்சணயமின்றி நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க கோரினார். ஆவ்வாறான முறைப்பாடுகள் கிடைத்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் இதன்போது உறுதியளித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கௌரவ பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க, இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், கௌரவ பிரதியமைச்சருமான பிரதீப் சுந்தரலிங்கம், ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் க.பிரட்லி ஜெனட், வடக்கின் அனைத்து வலயங்களினதும் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

