ஈழத்தமிழ் மக்களுக்கு நீதிகோரி ஐ.நா முன்றலில் போராட்டம்
ஐ.நா மனித உரிமை பேரவை முன்றலில் உள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் ஈழத்தமிழ் மக்களுக்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் நாளை நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் பிரித்தானியாவில் இருந்து கடந்த இரண்டாம் திகதி ஆரம்பித்த மனித நேய மிதிவண்டிப்பயண செயற்பாட்டார்கள் இன்று மாலை ஜெனிவாவை சென்றடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் இருந்து கடந்த இரண்டாம் திகதி ஆரம்பித்த மனித நேய மிதிவண்டிப்பயணம் நெதர்லாந்தின் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் மற்றும் வெளிநாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சு, பெல்ஜியத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகிய முக்கிய மையங்களில் முறையீடுகளை செய்தபின்னர் லக்சம்பேர்க், ஜேர்மனியிலும் சந்திப்புக்களை நடத்தியிருந்தது.
அதன் பின்னர் பிரான்சில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஆலோசனை அவை ஆகியவற்றின் முன்றல்களிலும் ஒன்றுகூடலை நடத்திய பின்னர் சுவிசுக்குள் பிரவேசித்து அங்கு பாசல், சொலொத்தூர்ன், லீசுட்டால் ஆகிய நகரங்களை கடந்தது.
அதன் பின்னர் பேர்ன் நாடாளுமன்றம் மற்றும் மாநகரசபை ஆகியவற்றிலும் சந்திப்புகளை நடத்தியிருந்தது.
இன்றுகாலை லூசேர்ண் பகுதியில் இருந்து புறப்பட்ட இந்தப் பயணக்குழு இன்று மாலை ஜெனிவாவை சென்றடைந்தது.
ஐ.நா மனித உரிமை பேரவை முன்றலில் ஈழத்தமிழ் மக்களுக்கு நீதிகோரி நடத்தப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திலும் இந்தப் பயணக்குழு பங்கேற்கவுள்ளது.
பிற்பகல் 02:30 அளவில் பிரதான ஒன்று கூடல் இடம்பெற முன்னர் நாளை காலை மனித உரிமை ஆணையாளரின் வதிவிடத்துக்கு முன்னால், ஒரு போராட்டம் நடத்தப்பட்டு முறையீட்டு மனு ஒன்றும் கையளிக்கபடவுள்ளது.
இதேபோலவே தமிழ்பண்பாட்டு வலையம் மற்றும் அனைத்துலக உரிமைச்சங்கம் ஆகிய அமைப்புகளும் நாளை ஐ.நா முன்றலில் தமிழினப்படுகொலைக்குரிய சாட்சியங்களை காட்சிப்படுத்தவுள்ளன.