இலங்கையில் கைவிடப்படும் சிறுவர்கள்; யுனிசெவ் தகவல்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏராளமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை யுனிசெவ் அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
பொருளாதார பின்னடைவு, வறுமை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற காரணங்களினால் பெரும்பாலான பிள்ளைகள் சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் சேர்க்கப்படுவதாக யுனிசெவ் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
சிறுவர்களின் நிலை
நாட்டில் தற்போது சிறுவர்கள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாகவும், கிராமப்புறங்கள் மற்றும் மலையக பிரதேசங்களில் இந்த செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் யுனிசெவ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியானது அடுத்தவருடமும் தொடரும் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் 2.9 மில்லியன் சிறார்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதோடு, மொத்தமாக 6.2 மில்லியன் இலங்கை மக்களுக்கு இந்த அவசர உதவி தேவைப்படுவதாக யுனிசெவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டும் இலங்கையில் தொடரும் அவலம்
நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக அதிகரித்துள்ள பணவீக்கத்தின் விளைவாக பல குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெவ் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் இவ்வருடம் விவசாயத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியானது பிரதான காரணமாக சொல்லப்பட்டுள்ளது.
அடுத்த வருடமும் விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் என்பதோடு, சிறார்களுக்கான இந்நிலை இன்னும் தொடரும் எனவும் யுனிசெவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கையில் உணவுகளை தவிர்கின்ற மக்களின் எண்ணிக்கை 5.3 மில்லியனை கடந்துள்ளதாகவும், இது மேலும் தீவிரமடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
