தமிழர்களின் தார்மீக தாயகம் தேசியம் சுயநிர்ணயத்தை வென்றடுக்கும் உரிமை போராட்டத்திற்கான அறைகூவல்!
தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்நணயம் என்பவற்றை வென்றெடுக்கும் நோக்கில் சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரி நாள் என பிரகடனப்படுத்தி இன்றைய தினம் வடக்கிலிருந்து கிழக்கு வரையான உரிமைப் பேரணியை ஆரம்பித்துள்ளோம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலிருந்து காலை 10 மணியளவில் ஆரம்பமான போராட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“இன்றைய தினம் சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினம் தமிழர்களின் கரி நாள் எனப் பிரகடனப்படுத்தி கடந்த 75 ஆண்டுகளாக எமது உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
மக்கள் பேரணி
இவ்வாறான நிலையில், தமிழர்களின் அடிப்படை உரிமைகளான தாயகம், தேசியம், சுயநிர்நணயம் என்பவற்றை வென்றெடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக அமைப்புகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த பேரணியை ஆரம்பித்துள்ளோம்.
மேலும் இன்று தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு கோரியும், இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரியும் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே உறவுகள் அனைவரும், குறித்த பேரணி தங்கள் தங்கள் இடங்களுக்கு வரும் போது, அனைவரும் பெரும் எழுச்சியாக வந்து இணைந்துகொள்ள வேண்டும்.
அறைகூவல்
அதுமட்டுமன்றி கட்சி, மதம், பிரதேசம் என்ற வேறுபாடுகள் இல்லாது அனைவரும் அணி திரண்டு வந்து இந்த பேரணிக்கு வலுச் சேர்க்க வேண்டும். ஒட்டு மொத்த சர்வதேசமும் எம்மை உற்று நோக்கிக்கொண்டிருக்கும் இந்த தருணத்திலே நாம் அனைவரும் ஒற்றுமையாக அணி திரண்டு எமது உரிமைக்காக போராட வேண்டும்.
தமிழர் தாயகத்தில் இருக்கும் உறவுகள் அனைவரும் நேரடியாக வந்து இதில் கலந்துகொள்வதன் மூலமும், தாக சாந்தி மற்றும் ஏனைய உதவிகளையும் இந்த பேரணியில்
கலந்துகொள்பவர்களுக்கு செய்வதன் ஊடாகவும் சமூகவலைத்தளங்களூடாகவும் இந்த பேரணி தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம் நாம் அனைவரும் இந்த பேரணியை
வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்” எனவும் தெரிவித்துள்ளார்.
