இலங்கை தமிழருக்கான தீர்வு -ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாடு வெளியானது
இந்தியா விடுத்துள்ள அழைப்பு
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கவும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான அதன் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
"இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கம் பற்றிய இந்தியாவின் நிலையான பார்வையானது, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வகையில், ஐக்கிய இலங்கையின் கட்டமைப்பிற்குள் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதாகும்" என்று பிரதிநிதி கூறினார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது கடனினால் இயங்கும் பொருளாதாரத்தின் வரம்புகளையும் அது வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"இலங்கை பிரஜைகளின் ஆற்றலைக் கட்டியெழுப்புவதும், அவர்களின் அதிகாரமளிப்பை நோக்கிச் செயற்படுவதும் இலங்கையின் சிறந்த நலன்களாகும், இதற்காக அடி மட்டத்திற்கு அதிகாரப் பகிர்வு ஒரு முன்நிபந்தனையாகும்" என்று திங்கட்கிழமை (12) ஜெனிவா அமர்வில் இந்திய பிரதிநிதி தெரிவித்தார்.
முன்கூட்டியே தேர்தல்களை நடத்திமாகாண சபைகளை செயற்படுத்துவதன் மூலம் இலங்கையின் அனைத்து பிரஜைகளும் வளமான எதிர்காலத்திற்கான தமது அபிலாஷைகளை அடைய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.