இந்தியாவிற்கு ஆபத்தாக மாறுகிறதா இலங்கையின் துறைமுகங்கள் - உண்மையை வெளிப்படுத்திய தூதுவர்!
இந்தியாவிற்கான எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும், இலங்கைக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையுமென இந்தியாவிற்கான சிறிலங்கா தூதுவர் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடாந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இரு தரப்பு உடன்படிக்கை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இலங்கையின் துறைமுகங்களை வெளிநாடு பயன்படுத்துவதற்கு சிறிலங்கா அனுமதிக்காது.
பொருளாதார மீட்சிக்கு இந்தியா முக்கியம்
கடனில் சிக்குண்டுள்ள இலங்கையின் பேண்தகு பொருளாதார மீட்சிக்கு இந்தியா முக்கியமானது என குறிப்பிட்டுள்ள இலங்கை தூதுவர், மூலோபாய ரீதியில் முக்கியமான அமைவிடத்தில் உள்ள இலங்கை, ஜப்பான் இஸ்ரேல் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான முத்தரப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுடன் ஆராய்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பை இலங்கை விரும்புவதாகவும், இது இலங்கை தனது பொருளாதார மாதிரியை விரிவுபடுத்துவதற்கு அனுமதிப்பதன் மூலம் இலங்கை கடன் நெருக்கடியிலிருந்து விரைவில் விடுபடுவதை உறுதி செய்யும்.
இந்தியாவுடன் பொருளாதார ஒருங்கிணைப்பு சாத்தியமானவுடன் புவிசார் அரசியல் விவகாரங்களிற்கு தீர்வை காணமுடியும்.
80 வீதமாக அதிகரித்துள்ள பணவீக்கம்
இந்தியாவின் பாதுகாப்பிற்கு எது ஆபத்தானதோ அது இலங்கைக்கும் ஆபத்து, இந்தியாவும் அவ்வாறே கருதுகிறது.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் சீரடைந்துள்ள நிலையில், இலங்கை 80 வீதமாக அதிகரித்துள்ள பணவீக்க நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இலங்கை தற்போது இந்தியா, சீனா, பரிஸ் கிளப் கடன் வழங்குநர்களுடன் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இந்தியா, சீனா போட்டி பாதித்துள்ளது என கருதவில்லை” என்றும் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.
