வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள்
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால், அரச தலைவரும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகி சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை நியமிக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு எதிர்க்கட்சிகளைக் கோருவதன் மூலம் அரசாங்கம் ஜனநாயகத்தை தமக்கு சாதகமாக திரிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் நிதி நிலைமை
நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், இலங்கை ரூபா மற்றும் டொலர்கள் இரண்டும் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை ஏற்கனவே மாதாந்த பாவனைக்காக ரூபா 500 மில்லியன் கடனைப் பெற்றுள்ளதுடன், மாத இறுதியில் மற்றுமொரு கடனை எதிர்பார்க்கும் அதேவேளை, இவ்வாறான நடவடிக்கைகள் தாங்க முடியாதவை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், ஆளும் கட்சி சார்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்காமை, திருத்தம் தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்படாததையே காட்டுகிறது என்றார்.
இந்த வரைபுக்கு அமைச்சரவை ஏன் அனுமதி அளிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்திக்குத் தெரியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.