பிரான்ஸில் தலையெடுக்கும் போராட்ட மேகம்!!
கனடாவில் தீவிரப்பட்டுள்ள கட்டாய கொரோனா தடுப்பூசிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பாரஉந்து முற்றுகை போராட்டங்கள் ஐரோப்பாவிலும் தலையெடுப்பதை ஆதாரப்படுத்தும் வகையில் பிரான்ஸின் நகரங்களில் இருந்து தலைநகர் பரிஸை நோக்கிய பாரஉந்து வாகன பேரணி புறப்பட்டுள்ளது.
கனேடிய தலைநகர் ஒட்டாவா கடந்த 10 நாட்களாக பாரஉந்துகளால் முடக்கப்பட்டதைபோல பரிஸ் நகரும் முடக்கபடக்கூடுமா என்ற அச்சத்தை எழுப்பும் வகையில் பிரான்சின் நீஸ், உட்பட்ட நகரங்களில் இருந்து பரிஸை நோக்கிய பார உந்து பேரணி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டம் நேற்று நீஸ் நகரில் இருந்து புறப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியுடன் ஏனைய நகரங்களில் இருந்தும் இணைந்து கொள்ளும் பேரணிகள் நாளை வெள்ளிக்கிழமையன்று தலைநகரில் அணிவகுக்கலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
கனடாவில் எல்லை தாண்டிச் செல்லும் பாரவூர்தி சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து பாரஉந்துகள் தலைநகர் ஒட்டாவாவை முடக்கியுள்ளதால் அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரான்சின் கட்டாய தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில் நடத்தப்படும் இந்தப் பேரணி குறித்து காவற்துறையும் அரசாங்கமும் உசாரடைந்துள்ளது.
ஆனால் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள நடைமுறைபோல பிரான்சில் இயங்கும் அநேக பாரஊர்திகளின் உரிமையாளார்களாக அதன் சாரதிகள் இருப்பதில்லையென்பதால் இந்த அணிவகுப்பை பலமாக்க ஏனைய வாகனங்களும் இணையவேண்டுமென ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
