துபாயில் கைது செய்யப்பட்ட பெண்! CID விசாரணையில் அம்பலமான தகவல்
சர்வதேச சிவப்பு பிடியாணையின் கீழ் துபாயில் கைது செய்யப்பட்ட இரண்டு பாதாள உலக குற்றவாளிகளும், பெரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண்ணும் கடந்த 16 ஆம் திகதி துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அழைத்து வரப்பட்ட பெண் கொழும்பு குற்றப் பிரிவின் (CCD) முன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரி ஒருவரின் மனைவி என்பதை குற்றப் புலனாய்வுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கல்கிஸ்ஸை, ரத்மலானையில் வசிக்கும் 56 வயதான நிஷாமணி டி சில்வா என்ற இந்தப் பெண், 2014 ஆம் ஆண்டு வெளிநாட்டு தூதரகத்தில் பணிபுரிந்தபோது செய்யப்பட்ட நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சிறைத்தண்டனை மற்றும் அபராதம்
அரசாங்க நிதியிலிருந்து சுமார் ஒரு மில்லியன் ரூபாய் மோசடி செய்ததற்காக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட போதிலும், அவர் சட்டத்தைத் தவிர்த்து நீண்ட காலமாக துபாயில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

சந்தேக நபர் துபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்டபோது, அவரது கணவரான தலைமை காவல்துறை பரிசோதகரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெலிகமவில் உள்ள W 15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய குழுவை வழிநடத்தியதற்காக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் அவரது மனைவி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். அவருடன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் 52 வயதான ரவீன் சமிந்த வீரசிங்க அல்லது 'புஞ்சா' ஆவார்.
இவர் கந்தானை பகுதியைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் சமீராவை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபராவார்.
மேலதிக விசாரணை
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். சந்தேக நபர் தற்போது மேலதிக விசாரணைக்காக களனி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மற்றைய சந்தேக நபரான கிரியல்தெனியகே டான் ரசிக சஞ்சீவ குமார அல்லது 'உரகஹ சுட்டி மல்லி' என்பவர் எல்பிட்டிய மற்றும் உரசமன்ஹந்திய பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஒருவர் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
முப்பது வயதான இந்த நபர் பல போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பதுடன், மேலதிக விசாரணைக்காக எல்பிட்டிய காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |