ட்ரம்ப் மீதான கொலை முயற்சி தொடர்பில் ஈரான் அளித்த பதில்..!
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்ற டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) பிரசார நடவடிக்கையின் போது அவரை கொலை செய்ய முற்பட்டதாக தங்களது தரப்பின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தினை ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயின் பகேய் (Esmaeil Baghaei) குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்காவினால் ஈரான் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் விமர்சித்துள்ளார்.
ட்ரம்ப் மீதான கொலை முயற்சி
இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான விரிசலை மேலும் சிக்கலாக்கும் நோக்கில் ஈரானிய எதிர்ப்பாளர்களால் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட சதி என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரானின் இராணுவத்தினால் டொனால்ட் ட்ரம்பை கொலை செய்வதற்காக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பர்ஹாத் ஷக்கேரி என்பவருக்கு எதிராக மன்ஹட்டன் பெடரல் நீதிமன்றில் அமெரிக்க நீதிச் சேவை திணைக்களம் குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்தது.
மேலும், குறித்த நபர், இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களை இலக்கு வைத்துப் பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருந்ததாகவும் குறித்த குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |