பலமுறை தோல்விக்கு பின்னர் ஈரானுக்கு கிடைத்த வெற்றி
பலமுறை தோல்விக்கு பின்னர் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தியது ஈரான்.
கடந்த 2020-ம் ஆண்டு ‘நூர்’ என்ற செயற்கைக்கோளை ஈரான் முதல் முதலாக விண்ணில் செலுத்தி, தனது சொந்த விண்வெளி திட்டத்தை உலகுக்கு வெளிப்படுத்தியது.
ஆனால் அதன் பின்னர் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் ஈரானின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ஈரானின் செம்மான் மாகாணத்தில் உள்ள இமாம் கமேனி விண்வெளித்தளத்தில் இருந்து ஒரு செயற்கைக்கோளை ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் பலமுறை தோல்விக்கு பின்னர் நேற்று ஈரான் தனது 2-வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரானின் வடகிழக்கில் உள்ள ஷாரூத் பாலைவன பகுதியில் இருந்து ‘நூர்2’ செயற்கைக்கோள் ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டதாகவும், அந்த செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
