“தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து” எனும் கோசங்கள் முழங்க கிழக்கு நோக்கி நகரும் பேரணி!
சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களின் கரி நாள் எனப் பிரகடனப்படுத்தி, பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்த வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி, மூன்றாவது நாளாக முல்லைத்தீவு நகரில் இருந்து சற்று முன்னர் ஆரம்பித்துள்ளது.
இதன் போது, தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து எனும் கோசங்களுடன் பல்கலை மாணவர்கள், சமூக அமைப்பினர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலர் பேரணியாக சென்றுகொண்டிருக்கின்றனர்.
கரி நாள் பேராட்டம்
சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கடந்த 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு, சுதந்திர தினத்தன்று வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு கறுப்பு கொடிகள் தொங்க விடப்பட்டு கறுப்பு தினமாக முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை நோக்கி நகரும் பேரணி
அன்றைய தினம் கறுப்பு தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று மூன்றாவது நாளாக முல்லைத்தீவில் இருந்து ஆரம்பமாகிய இப்போராட்டம் திருகோணமலையைச் சென்றடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.








