யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவையில் ஊழல்: பயணிகள் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவையின் சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள் இடம்பெறுவதுடன் திட்டமிட்ட பயண இடையூறுகளை சுங்க அதிகாரிகள் ஏற்படுத்துவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக காங்கேசந்துறை சுங்கத்தில் இரண்டு கருமபீடங்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளிடம் நீண்ட நேர விசாரணைகள் மேற்கொள்வதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, நபர் ஒருவருக்கு 35 தொடக்கம் 40 நிமிடம் வரை விசாரணை செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுதாக பாதிக்கப்பட்ட பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்
அடிப்படை வசதிகள் அற்ற காத்திருக்கும் பகுதியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் மலசல கூட வசதிகளும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும் பயணிகள் கவலை வெளியிட்டுள்ளர்.
அதே நேரம் சில பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிப்பதாகவும் வரியில் பாதி அளவிலான தொகைக்கே பற்று சீட்டு வழங்குவதாகவும் மீதி தொகைக்கு பற்றுசீட்டு வழங்குவதில்லை எனவும் பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், இலங்கையில் பழங்களின் விலைகள் அதிகமாக காணப்படுவதால் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படும் சிறிய அளவிலான பழங்களையும் அதிகாரிகள் அபகரித்து கொள்வதாகவும் மக்கள் தெரித்துள்ளனர்.
அத்துடன், தொடர்சியாக நாகப்பட்டினம் - காங்கேசந்துறை ஊடாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள், வர்தகர்கள் என அனைவரும் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் தொழில்ரீதியாக இந்தியா செல்பவர்களிடம் நேரடியாக சுங்க அதிகாரிகளால் இலஞ்சம் கோரப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |