தையிட்டியில் இராணுவத்தினர் அடவாடி - காவல்துறை வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடை!
இருவர் கைது (புதிய இணைப்பு)
தையிட்டி பகுதியில் தொடரும் பதற்ற நிலையை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக அப்பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் நுழையமுடியாதவாறு காவல்துறை வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடையேற்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரை பார்க்க சென்றவர்களில் இருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை காவல்துறையினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.
தையிட்டியில் தொடரும் பதற்றம் (இரண்டாம் இணைப்பு)
இன்று மாலை 3 மணியளவில் தையிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தினை தொடர்ந்து போராட்டத்தில் முன்பக்கமாக உள்ள தனியார் காணியில் கூடாரம் அமைத்து போராடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென அங்குவந்த காவல்துறையினர் இங்கு கூடாரம் அமைக்க காணி உரிமையாளரின் அனுமதி உள்ளதா என கேட்ட நிலையில் போராட்டகாரர்கள் அனுமதி பெற்றா இவ்வளவு பரப்பு காணியில் விகாரை அமைக்கப்பட்டது என காவல்துறையினரிடம் திருப்பி கேள்வி எழுப்பினர்.
உரிய காணி உரிமையாளரிடம் அனுமதி பெற்று வருகை தந்த நிலையில் காவல்துறையினரால் கூடாரம் கைப்பற்றப்பட்டு விகாரையில் முன்பாக இருந்த பொதுமக்கள் பலர் குறித்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த விகாரையின் ஒழுங்கை முடக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,சிரேஷ்ட சட்டத்தரணி காண்டீபன் உட்பட நால்வர் முடக்கப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் காவல்துறை ஜீப்ரக வாகனத்தினை குறுக்கே விட்டு நால்வரும் முடக்கப்பட்டனர்.
இதே நிலையில் குறித்த பகுதியில் பதற்ற சூழல் ஏற்பட்டது.வீதியால் சென்று வரும் பொதுமக்கள் அநாவசியமான முறையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இரவு 9:30 மணியளவில் இரு உழவு இயந்திரங்களில் இரும்பு முள்வேலிகள் கொண்டுவரப்பட்டு விகாரையில் இரண்டு பக்கமும் முள்வேலிகள் இடப்பட்டு உள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் செய்தி சேகரிக்க தடை
இந்நிலையில் உள்ளிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நால்வர் இருக்கும் பகுதிக்கு செல்வதற்கு ஊடகவியலாளர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.எதற்காக ஊடகவியலாளர்கள் செல்ல தடை விதிக்கின்றீர்கள் என வினவிய பொழுது மேலிடத்திலிருந்து தமக்கு உத்தரவு வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.மேலும் நீதிமன்ற கட்டளை இன்றியே இவ்வாறு குறித்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
லத்தியுடன் மிரட்டிய காவல்துறையினர்
ஊடகவியலாளர்களை தடுத்ததை அடுத்து காவல்துறை பொறுப்பதிகாரியுடன் கதைக்க முனைந்த பொழுது லத்தியினை காட்டி காவல்துறையினர் அச்சுறுத்தினர்.
சுகாஷ் - காவல்துறை இடையே வாக்குவாதம்
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை சந்திக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரட்னம் சுகாஷ் வருகை தந்த பொழுது உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் வாக்குவாதம் நிலவியது.
நீதிமன்ற கட்டளையை காட்டுமாறும் ஜனநாயகரீதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை சந்திக்க எனக்கு உரிமையுண்டு எனவும் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் கடமையிலிருந்த காவல்துறையினர் வெளிநாட்டு பணம்பெறுவதற்காகவே இவர்கள் இப்படி செய்யகின்றார்கள் எனவும் சுகாஷினை நோக்கி குடித்துவிட்டா வருகை தந்துள்ளீர் என்று நாகரிகமற்றமுறையில் கேள்விகளை கேட்டனர்.
நான்குடித்துவிட்டு வருகை தந்திருந்தால் உடனடியாக பரிசோதனை செய்யவும் என காவல்துறையினருடன் தர்க்கப்பட்டநிலையில் பாதுகாப்பு பலப்படுத்தபட்ட நிலையில் சுகாஷ் உட்பட்ட குழுவினரால் உள்ளே செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து போராட்ட தலத்திற்கு செல்லமுடியாது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், பொதுமக்கள் உட்பட சிலர் முள்வேலிகளுக்கு வெளியே வீதியில் தரித்துள்ளார்கள்.இராணுவ ,காவல்துறை புலனாய்வாளர்கள் உட்பட பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.அதிகளவு தமிழ் காவல்துறையினரு கடமையில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
யாழ்.தையிட்டியில் பதற்றம் - கூடாரங்களை பிடுங்கியெறிந்து இராணுவத்தினர் அடாவடி..!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி இன்று போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக அப்பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் நுழையமுடியாதவாறு காவல்துறை வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடையேற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட சிலர் காவல்துறையினருடன் வாதம் புரிந்து வருகின்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து இன்று கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக நகர்ந்து தையிட்டி விகாரை வரை சென்று விகாரைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தொடரச்சியாக மூன்று நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இன்று முதல் எதிர்வரும் வெசாக் தினமான வெள்ளிக்கிழமை வரையில் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக குறித்த பகுதியில் பந்தல் அமைக்க முற்பட்ட நிலையில், காவல்துறையினர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.
இந்த நிலையில் தனியார் காணியொன்றில் பந்தல் அமைக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனபோதும் போராட்டகாரர்களை அச்சுறுத்தி காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், போராட்டப்பகுதியினை சுற்றி இராணுவத்தினர் முள் வேலிகளை அமைத்து வருகின்றமையினால் அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவு ஒன்றுக்கூடியுள்ளதுடன் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.




