கள்ள உறுதி முடிக்கப்பட்ட யாழ். மாநகர சபை ஆதனம் - துணைபோன அதிகாரிகள்: அம்பலமாகும் உண்மைகள்
யாழ். மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டு மாநகர சபையினுடைய ஆதன வரி பதிவேடுகளில் கூட பதிவு மாற்றம் செய்யப்பட்டதாக நம்பகரமாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த யாழ் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் (C.V.K.Sivagnanam) குற்றம்சாட்டியுள்ளார்.
குறித்த மோசடிக்கு மாநகர சபையின் சில அதிகாரிகளும் துணை போயுள்ளதாக சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) - கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மாநகர சபையினுடைய ஆதன வரி பதிவேடு
மேலும் தெரிவிக்கையில், யாழ் மாநகர சபையின் முன்னைய கட்டிடத்திற்கு கிழக்கு பக்கமாக இருந்த வாசலுக்கு எதிராக ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடமும் மாநகர சபையின் அலுவலகமாக இருந்தது.

அது ஒரு கொள்வனவு செய்யப்பட்ட கட்டிடம். ஆனால் அண்மையில் அதனை தற்செயலாக பார்த்தபோது அது மாநகர சபையினுடைய சொத்து என்ற நிலையில் இல்லாமல் வேறு பலர் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் இருந்தது.
அதை ஆராய்ந்த பொழுது அந்த சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டு மாநகர சபையினுடைய ஆதன வரி பதிவேடுகளில் கூட பதிவு மாற்றம் செய்யப்பட்டதாக நம்பகரமாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.
மக்களுடைய சொத்துக்கு ஏற்பட்ட நிலை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளேன்.
இந்த ஆதனம் அப்போது வாடி வீடு இருந்த வீதி, முன்னர் முகப்பு வீதி என அழைக்கப்பட்டடு பின்னாளில் இராசேந்திர பிரசாத் வீதி என மாற்றப்பட்ட வீதிக்கு அடுத்ததாக அந்த கட்டிடம் இருந்தது.
அந்தக் கட்டடத்தின் மேல் பகுதியிலேயே தான் பொது நூலக ஸ்தாபகர் செல்லப்பா பொது நூலகத்தை ஆரம்பித்து வைத்தார். அதற்கு ஆதாரமாக யாழ் மாநகர சபையின் வெள்ளி விழா மலரை குறிப்பிடலாம்.
கட்டிடம் தேவை கருதி கொள்வனவு
அந்த மலர் வெளியிடும் போது யாழ் மாநகர சபையில் கணக்காளராக நான் இருந்தேன். குறித்த காணி தனியாரின் காணியாக இருந்தது. யாழ் மாநகர சபை, நகர சபையாக இருந்த காலத்தில் அந்த கட்டிடம் தேவை கருதி கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இந்த புத்தகத்திலே கொள்வனவு செய்த கட்டிடங்கள் என்று பட்டியலில் களஞ்சியசாலை வசதிக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக கடந்த 23ஆம் திகதி மாநகர சபை ஆணையாளருக்கு ஒரு கடிதம் எழுதி இது தொடர்பிலான நடவடிக்கைக்கு வலியுறுத்தி இருக்கிறேன். இந்த விடயத்தை வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன். 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னரே தான் இந்த இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அது பற்றை வளர்ந்து மாநகர சபை சொத்தாகவே பார்க்கப்படவில்லை. தற்போது அங்கு தற்காலிக வியாபார நிலையம் ஒன்று இயங்குகிறது. அது குத்தகைக்கு கொடுத்திருக்க வாய்ப்பில்லை.
உடனடியாக அதனை மீளப்பெறுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாநகர முதல்வருக்கும் கடிதத்தின் பிரதியை அனுப்பி இருக்கிறேன்.
குறித்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த மோசடிக்கு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற விடயம் வெளிப்படுத்தப்பட வேண்டும். மாநகர சபையின் சொத்தை மாநகர சபையின் பதிவேட்டிலேயே மாற்ற முடியும் என்று சொன்னால் எந்த அளவுக்கு நிலைமை இருக்கிறது.
முதல்வருக்கும் ஆணையாளருக்கும் ஒத்துழைக்காத நிலையிலேயே சில அதிகாரிகள் இருக்கிறார்கள். முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு சிலர் அதிகாரிகள் இருக்கிறார்கள் உடனடியாக இந்த விடயத்தில் ஆணையாளர், ஆளுநருடன் கதைத்து புதிதாக உருவாக்கப்பட்ட காவல்துறையினரின் விசேட பிரிவில் யாழ்ப்பாண காவல் நிலையத்திலேயே இந்த விடயத்தை முறைப்பாட்டை செய்ய வேண்டும். இந்த மோசடிக்கு துணை போனவர்களை அம்பலப்படுத்த வேண்டும் - என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 10 மணி நேரம் முன்