தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் - தமிழ் அரசியல்வாதிகளுக்கு தென்னிலங்கையிலிருந்து எச்சரிக்கை!
வடக்கு கிழக்கில் மதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் விளையாட்டுக்களை முன்னெடுக்க கூடாதென சிறிலங்கா புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை குறித்த சர்ச்சை தொடர்பில் முழுமையான அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சிறிலங்கா புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இது தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் கிடைக்கப் பெறவுள்ளதாகவும், அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் வலியுறுத்தல்
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி பொது மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நேற்றைய தினம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், குறித்த நடவடிக்கை அரசியல்வாதிகளின் விளையாட்டு என சிறிலங்கா புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் காலத்தில் மாத்திரம் நடத்தப்படும் இவ்வாறான விளையாட்டுக்கள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவர் எச்சரித்துள்ளார். அத்துடன், மதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் விளையாட்டுக்களை முன்னெடுக்க கூடாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர் ஆலய விவகாரத்திலும் இவ்வாறே இடம்பெற்றது. அவர்களாகவே சென்று ஆலயத்தை உடைத்து அதனை நாம் உடைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
ஆலயங்கள் புனரமைப்பு
எம்மை இனவாதிகளெனக் கூறுபவர்கள் இறுதியில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உடைந்து விழுந்த கோவில்களை எமது முயற்சியில் மீளப் புனரமைத்தமை தொடர்பில் எவரும் பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய விதுர விக்ரமநாயக்க இதற்கான அடிப்படை காரணத்தை கண்டறிய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டங்களினூடாக மதத்தைப் பின்பற்றுவதற்கான மக்கள் சுதந்திரத்தை தாம் மட்டுப்படுத்த விரும்பவில்லை எனவும் தையிட்டி விகாரை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் அவர் கோரியுள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 20 மணி நேரம் முன்
