இந்தியாவின் இலங்கை வியூகம் - இன்றிரவே புறப்படும் வெளியுறவு அமைச்சர்
மாலைதீவில் இன்று சந்திப்புக்களை நடத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு வரும் நிலையில், இந்தியா தனது சாகர்மாலா திட்டம் மற்றும் அயலவருக்கு முன்னுரிமை ஆகிய திட்டங்களை தீவிரமாக நகர்த்தவுள்ளதாக தெரிகிறது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளை மேலும் தனது வியூகத்துக்குள் கொண்டுவரும் வகையிலான திட்டங்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பயணம் இடம்பெற்று வருகின்றது.
இந்தியாவின் முக்கிய கடல்சார் அயல்நாடுகள்
இந்த இரண்டு நாடுகளும் இந்தியாவின் முக்கிய கடல்சார் அயல்நாடுகள் என்பதால் இந்தியா தனது சாகர் திட்டம் மற்றும் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை திட்டத்தையும் இன்றும் சிறப்பாக நகர்த்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தனது பதவிக்காலத்தில் நான்காவது முறையாக இன்று மாலைதீவுக்குச் சென்ற ஜெய்சங்கர் அங்கு மாலைதீவு அதிபர் இப்ராஹிம் முகமட் சோலி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷாஹித் ஆகியோருடன் முக்கிய சந்திப்புக்களையும் பேச்சுக்களையும் நடத்தியிருந்தார்.
இருதரப்பு ஒப்பந்தங்கள்
அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டிருந்தன.
இதன்பின்னர் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள திட்டங்களுக்குரிய அடிக்கல் நாட்டுவிழாவிலும் திறப்பு விழா ஒன்றிலும் அவர் பங்கேற்றிருந்தார்.
இதன் பின்னர் அமைச்சர் ஜெய்சங்கர் இன்றிரவே மாலைதீவில் இருந்து கொழும்புக்கு புறப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
