இலங்கை மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம் : ஜீவன் தொண்டமான்
"இலங்கையின் தற்போதைய நீர்த்துறை மறுசீரமைப்பில்,ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கை திட்டங்கள், முக்கிய வகிபாகத்தை வகிக்கின்றது"என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும், ''இலங்கை மக்களுக்கு சுத்தமான, சுகாதார பாதுகாப்புமிக்க குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (1) ஜீவன் தொண்டமானுக்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளுக்கும் இடையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பொழுது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மூலோபாய நகர்வு
இந்த திட்டம் நீர் முகாமைத்துவம், தடையற்ற நீர் விநியோகம் உள்ளிட்டவற்றை இத்திட்டம் ஊக்குவிப்பதுடன், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட மூலோபாய நகர்வுகளையும் உள்ளடக்கியுள்ளது.
இக்கலந்துரையாடலின்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கை அடிப்படையிலான கடன் திட்டத்தின் கீழ், அரச மறுசீரமைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நிலை குறித்தும்,ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய காலக்கெடு குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.