போராட்டக்களத்தை விட்டு நகராத போராட்டக்காரர்கள்! அடுத்தது என்ன...
போராட்டத்துக்காக நேற்றைய தினம் கொழும்புக்கு வந்த மக்கள் கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகத்திற்கு அருகிலேயே தொடர்ந்தும் உள்ளனர்.
நேற்று முற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் காவல்துறையினரின் தடைகளை மீறி அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகம் என்பவற்றை முற்றுகையிட்டனர்.
போராட்டத்தின் பின்னணி
நேற்றைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் களனி பல்கலைக்கழகத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தது.
ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்த வந்த மாணவர்கள் நேற்று முன்தினம் கொழும்பு கோட்டை பகுதியிலேயே இரவு முழுவதும் தங்கினர்.
இந்நிலையில், நேற்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் இருந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்புக்கு சென்றிருந்தனர்.
போராட்டக்கார்கள் வசமான அரச தலைவர் மாளிகை
திரளாக ஒன்று சேர்ந்த மக்கள் அனைவரும் இணைந்து நீண்ட நேர போராட்டங்களுக்கு பின்னர் அரச தலைவர் செயலகத்தை முற்றுகையிட்டு தம் வசமாக்கினர்.
அரச தலைவர் மாளிகையை கைப்பற்றிய ஆர்ப்பாட்டகாரர்கள் அரச தலைவர் மாளிகை நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து, நீர் விளையாட்டுகளை விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்தன.
அரச தலைவர் மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்கள் அறைகளில் நடந்து சென்று வசதியான இருக்கைகளில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.
சிலர் அரச தலைவர் மாளிகையின் மேற்கூரையில் ஏறி தேசியக் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர்.
அரச தலைவர் செயலகமும் போராட்டக்காரர்கள் வசம்
இதனை தொடர்ந்து மக்கள் அரச தலைவர் செயலகத்தையும் கைபற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறிருக்க, நேற்று அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகத்தை கைபற்றிய போராட்டக்காரர்கள் இன்றும் அங்கேயே தொடர்ந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.