ஈழத் தமிழர்கள் மீது அண்ணாமலைக்கு ஏன் திடீர் பாசம்...
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் கே. அண்ணாமலையின் புலம்பெயர் தமிழர்களை நோக்கிய பயணம் ஒரு பிரசார பயணமாக இருக்கலாம் என்று தாம் கருதவதாக தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஈழத் தமிழர்களை நோக்கிய இந்திய ஆளும் கட்சியின் நகர்வு, அண்ணாமலையின் பிரித்தானிய சுற்றுப்பயணம், அதன் பின்னணி அரசியல் குறித்து பல விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணிகள் தொடர்பில் அவர் கூறுகையில், இந்தப் பயணத்தை நாங்கள் பார்ப்போமாக இருந்தால், இந்தியாவிலேயே தமிழகத்துக்கு கூட அமைச்சர் அமித் ஷா வந்து 9 ஆண்டுகால சாதனையை விளக்கிப்பேசி இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் தமிழகத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள். அதேபோல இந்தியாவினுடைய பல பகுதிகளில் அவர்களது பிரசாரம் நடக்கிறது.
இதிலே 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலே தமிழகத்தினுடைய 39 தொகுதிகளும், புதுச்சேரி தேர்தல் தொகுதி என 40 தேர்தல் தொகுதிகளை குறி வைத்து ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையிலே ஏதாவது செய்ய முடியுமா என்ற எண்ணம் தேசிய கட்சிகளிடையேயும் முக்கிய கட்சிகளிடையேயும் இருந்து வருவது இயற்கை. அதனுடைய ஒரு அம்சமாகத்தான் இதை நாங்கள் பார்க்க முடியும்.
அதை நோக்கி ஒரு பிரசார பயணமாகவே அண்ணாமலையில் பயணம் இருக்கலாம் என சிவாஜிலிங்கம் கூறுகிறார்.
