கச்சத்தீவு விவகாரம்! இந்தியாவிடம் அடிபணிய தேவையில்லை : சரத் வீரசேகர
கச்சத்தீவு (Kachchatheevu) இலங்கைக்கு சொந்தமானது, இவ்விடயத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவின் (India) ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய தேவை கிடையாதென அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என இந்தியாவின் திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் ஒன்றை அண்மையில் நிறைவேற்றியுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்திய கடற்றொழிலாளர்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”கச்சத்தீவு விவகாரத்தை இந்திய அரசாங்கம் அரசியல் பிரசாரத்துக்காகவே பயன்படுத்திக் கொள்கிறது. இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று சட்ட விரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை.
இந்திய கடற்றொழிலாளர்கள் தான் இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து கடல் வளத்தையும், மீள் வளத்தையும் நாசம் செய்கிறார்கள்.
இவர்களை இலங்கையின் கடல் பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பதை தடுப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்விடயத்தில் இந்திய அரசாங்கம் மந்த கதியில் தான் செயற்படுகிறது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இவ்விடயம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய அவசியம் கிடையாது.
அநுரவின் இந்திய விஜயம்
இலங்கை இவ்விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவிப்பதும் பிற்காலத்தில் பல நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு காரணியாக அமையும்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பிரதான அம்சமாக கச்சத்தீவு காணப்படுகிறது. இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக விதிக்கப்படும் சகல நிபந்தனைகளுக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் கிடையாது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) இந்திய விஜயம் பல விடயங்களை உணர்த்தியுள்ளது. அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்ற நிலையில் அதன் அம்சங்களின் பிரதான ஒன்றாக கருதப்படும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக இந்தியாவுக்கு வாக்குறுதியளித்துள்ளமை தவறானதொரு செயற்பாடாகும்.
புதிய அரசியலமைப்பு ஊடாக சமஷ்டியாட்சி முறைமையின் அம்சங்களை நடைமுறைபடுத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. எக்காரணிகளுக்காகவும் சமஸ்டியாட்சி முறைமையை உருவாக்க இடமளிக்க போவதில்லை என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கிறோம்"' என குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |