கச்சதீவையும் விட்டு வைக்காத பௌத்தமயமாக்கல் - இந்தியாவை சீண்டிப்பார்க்க எத்தனிக்கிறதா சிறிலங்கா!
கச்சதீவு இலங்கை இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படும் நிலையில், தற்போது, அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பொளத்தமயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை இந்திய இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்த கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பௌத்தமயமாகும் கச்சதீவு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் சிறிலங்கா படையினர் கச்சத்தீவையும் விட்டுவைக்காது அங்கேயும் பாரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.
இவ்வாறான நிலையில், இது வரை காலமும் இந்திய இலங்கை பக்தர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொண்டிருந்த நிலையில், இந்த வருடம் புதிதாக பௌத்த பிக்குகள் குழு ஒன்றும் கச்சதீவிற்கு சென்றிருந்தைமையும் தற்போது, பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மேலும் கச்சதீவில் 5 முதல் 10 கடற்படையினரே கடமையில் இருக்கின்ற நிலையில், இவ்வாறு பிரமாண்டமாக புத்தர் சிலை கட்டியிருப்பது சமூக ஆாவலர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சதீவு வழங்கப்பட்ட போது அமைக்கப்பட்டிருந்த அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதனைத் தவிர நிரந்தரமான கட்டடங்கள் எவையும் அமைக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயரமாக வேலி அமைத்து கட்டுமானம்
இவ்வாறான நிலையில், அங்கு கடற்படையினருக்கான இருப்பிடம் கூட நிலையானதாக அமைக்க முடியாது என்பதே ஒப்பந்த யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம். ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறி தற்போது நிரந்தரமான பௌத்தமயமாக்கலுக்கான ஒரு திட்டமாக பாரியளவில் புத்தர் சிலை ஒன்று இரகசியமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, அந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியை சூழ மிக உயரமான பனை ஓலை வேலி அமைத்து மிக மிக இரகசியமாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அண்மையில் நடைபெற்ற திருவிழாவின் போதும் அங்கு சென்ற கிறிஸ்தவ மதகுருமாரையோ, பக்தர்களையோ குறிப்பிட்ட இடத்திற்கு அருகில் கூட செல்ல கடற்படையினர் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக முளைத்துள்ள அரச மரங்கள்
இதேவேளை, கச்சதீவு பகுதியில், கடற்கரையை சூழவும் காட்டு மரங்களே வளர்ந்திருந்தன. ஆனால் தற்போது, கடற்படையினர் அரச மரங்களை கொண்டுவந்து குறித்த பகுதியில் வைத்துள்ளனர் என்பதும் அப்பட்டமாகத் தெரிவிகின்ற ஒரு விடயம்.
“கச்சத்தீவு, தற்போது சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு வழங்கும் போது அந்தோனியார் ஆலயத்துடனேயே வழங்கியது.
இவ்வாறான நிலையில், இலங்கை பொருளாதார ரீதியாக அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாடுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ள போதும், இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
ஆகவே இவ்வாறான சிறுமைத்தனமான செயற்பாடுகள் இலங்கை இந்திய நல்லுறவில் பாரிய விரிசலாக உருவெடுக்கும் சந்தர்ப்பங்களும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பக்தர்களை மதிக்காத கடற்படை
கடந்த மாதம் 3,4 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நடைபெற்றபோது. தமிழ்நாட்டில் இருந்து 2281 பேரும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த பக்தர்களை சிறிலங்கா கடற்படையினர் நடத்திய விதம் மிகவும் கேவலமானதாக பார்க்கப்படுகின்றது எனவும் அங்கு சென்ற பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்திய அரசாங்கம், கச்சதீவு திருவிழாவுக்கு வருபவர்களுக்காக 40 மில்லியன் ரூபாவை செலுத்தியிருந்தது. ஆனால் அவர்களுக்கு முறையாக குடிநீர், உணவு வழங்கப்படவில்லை. இந்த ஏற்பாட்டை கடற்படையே செய்திருந்தது.
பாரிய புத்தர் சிலை
தமிழ்நாட்டில் இருந்து கச்சத்தீவு வந்த அனைவரையும் தனியொரு கடற்படை உத்தியோகத்தரே பதிவை மேற்கொண்டுள்ளார். 4 மணித்தியாலங்கள் கடற்கரையில் இருந்தே ஆலயத்திற்கு அவர்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளமையானது கண்டிக்கத்தக்கது எனவும் எதிர்ப்புக்கள் வெளிவந்துள்ளன.
கச்சத்தீவு திருவிழாவின் போது கடற்படையினரின் விருந்தினர்களுக்கே முன்னிலை வழங்கப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டில் இருந்தும் வடக்கு, கிழக்கில் இருந்தும் சென்றவர்களுக்கு எந்தவிதமான ஏற்பாடுகளையும் கடற்படையினர் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவில் அந்தோனியார் ஆலயம் மாத்திரமே இவ்வளவு காலமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது விடைகாண முடியாத கேள்வியாகவுள்ளது.
அந்தோனியார் ஆலயத்திற்குரியது
இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும். இருப்பினும் வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவிவருவதைப் அபோன்று கச்சதீவிலும் தற்போது பௌத்த சின்னத்தை நிறுவியுள்ளனர்.
கச்சத்தீவையும் விட்டுவைக்காத நிலைமையே தற்போது இருக்கின்றது. ஆனால் கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று இனி வரும் காலங்களில் பதில் வரலாம்.
இதேவேளை, கச்சதீவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
அது மட்டுமல்லாது கச்சதீவிலும் இரகசியமான பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போது அனைத்து ஊடகங்கள் மூலமும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
