பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுதலை!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிதம்ம தேரர் இன்று (23) கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல் மஹவத்த முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் சார்பில் சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷவீந்திர விக்ரமவுடன் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீர்ஸ், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 7 (2) பிரிவின் கீழ் சந்தேக நபரை நிபந்தனை பிணையில் விடுவிக்க சட்டமா அதிபர் இணங்குவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
வெளிநாடு பயணிக்க தடை
இதன்படி, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சிறிதம்ம தேரரை விடுதலை செய்ய உத்தரவிட்ட மேலதிக நீதவான், அவரின் வெளிநாடு பயணிக்க தடை விதித்தும் உத்தரவிட்டார்.
அத்துடன் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத தடுப்பு பணியகத்தில் முன்னிலையாக வேண்டும் என மற்றுமொரு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டது.
