காணாமல் போன துணை வேந்தர் : சிஐடியில் முன்னிலையானார் கருணா
ஐக்கிய தமிழர் சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்(karuna) இன்று (டிச.19) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (cid)வருகை தந்துள்ளார்.
காவல்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியில் வந்த கருணா ஊடகங்களிடம் பேசும் போது, ரவீந்திரநாத் கடத்தல் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், மீண்டும் விசாரணைக்கு வரத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காணாமற்போன பேராசிரியர்
2006ஆம் ஆண்டு மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக துணை வேந்தர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்ததாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத்(S. Raveendranath) காணாமற் போயிருந்தார்.
உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த பௌத்தலோக மாவத்தையில் வைத்து கருணா குழுவினரால் இவர் கடத்தப்பட்டதாக அந்நாட்களில் செய்தி வெளியானதுடன் இது தொடர்பாக தெஹிவளை காவல் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |