ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய சம்பவம்...! தவறான காணொளியால் பறிபோன உயிர்
கேரளாவில் அரசு பேருந்தில் நபர் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் காணொளி ஒன்றை வெளியிட்ட பெண்ணொருவர், தற்போது அந்த நபர் உயிரிழந்தமையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷிம்ஜிதா முஸ்தபா எனும் பெண்ணொருவரே இவ்வாறு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கடுமையான விமர்சனங்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் அரசு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அவருடன் பயணித்த குறித்த பெண், தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகத் தெரிவித்து அதனைத் தனது தொலைபேசியில் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட இக்காணொளியினால், குறித்த நபர் கடுமையான விமர்சனங்களுக்கும் சமூக ரீதியான அவதூறுகளுக்கும் உள்ளாகியுள்ளார்.

தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனத் தனது உறவினர்களிடம் தெரிவித்துப் புலம்பிய குறித்த நபர், இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் தனது வீட்டிலேயே தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அந்தப் பெண் வேண்டுமென்றே பேருந்தில் நடந்தவற்றைத் தவறாகச் சித்தரித்துக் காணொளி வெளியிட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
வழக்குப் பதிவு
இதன்பின்பு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கேரளா டிஜிபியிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து, அந்தப் பெண் தனது சமூக வலைத்தளப் பக்கங்களை நீக்கிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில், கேரளா காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவரைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்பின்பு, தவறான தகவலைப் பரப்பி ஒருவரை உயிர் மாய்க்கத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர் பயன்படுத்திய தொலைபேசியைப் பறிமுதல் செய்யவும் மற்றும் பேருந்தில் இருந்த சாட்சிகளிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |