வெளுத்தெல்லாம் வெண்ணையல்ல! இப்படி ஒரு பழமொழி தமிழரிடையே வழக்கத்தில் உள்ளது...
உலகத்துக்கு துணையாக உள்ள சந்திரனை போல அரசாங்கத்துக்கு துணையாக வடக்கை பற்றி நிற்கும் முக்கிய அரசியல் பிரதிநிதி ஒருவர் கிபுல் ஓயா திட்டம் தொடர்பில் முன்வைத்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் விமர்சனங்களை சுமந்து வருகின்றன.
குறித்த திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானதும், அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல்கள் என அவரது கருத்து அமைந்துள்ளது.
“கிவுல் ஓயா திட்டம், குறிப்பிட்ட ஒரு இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதாக அல்லாது, தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சி மற்றும் நீர்வள முகாமைத்துவத்தை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டம்.
“இந்த ஆட்சியின்கீழ் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எந்தவிதமான இடமும் இல்லை. அனைத்து மக்களையும் சமமாகக் கருதும் கொள்கையுடனேயே அரசாங்கம் செயல்படுகிறது.
தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் படி, கிவுல் ஓயா திட்டம் பாரம்பரிய தமிழ்ப் பகுதிகளில் நில அபகரிப்பையும், மக்கள் தொகை மாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், உள்ளூர் மக்களின் சம்மதமின்றி திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீடுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ் மக்களின் நில உரிமைகளும், சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், எந்த ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது.
சட்டத்துக்கு முரணான நில கையகப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறாது என்றும், திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழேயே மேற்கொள்ளப்படும்” எனவும் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன.
அதுமட்டுமல்லாமல் "மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் வடக்கில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.
அந்த காலகட்டங்களில் எல்லாம் அரசாங்கத்துடன் ஒட்டுனியாக இருந்த தமிழ் கட்சிகள் இன்று தமிழ் மக்களுக்கு நன்மை நடக்கும் பொழுது பொங்கி எழுகின்றன.
தமது அரசியல் இருப்புக்கு இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியால் தான் ஆபத்து என்பதால் தான் அவர்கள் மக்கள் நலன் திட்டங்களில் கூட அரசியல் சாயம் பூசி ஒரு இழிவான அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்." எனவும் விமர்சித்துள்ளார்.
இவர் கூறுவது போல் இல்லாவிட்டால் மகிழ்ச்சிதான் ஆனால் அப்படியான ஒரு திட்டம் செயற்படுத்தப்படுமானால்?
இந்த நாடு 1930 களில் இருந்து தமிழர் தயாகப்பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்புகளை கண்டு வந்திருக்கிறது.
50களின் கல்லோயா திட்டத்தில் கந்தளாய் அல்லை திட்டத்தில் உணர்த்தியிருக்கிறது தமிழர்களின் இதயபூமியான மணலாற்றை வெலிஓயாவாக மாற்றியிருக்கிறது.
பூர்வீக தமிழ்க்கிராமங்களை கொண்ட அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல என்ற சிங்கள மாவட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழர்களின் தலைநகரான திருகோணமலை கடுமையான நில அபகரிப்பிற்குட்படுத்தப்பட்டு அதிகளவான நிலம் சிங்களமயமாகப்பட்டிருக்கிறது.
மட்டக்களப்பில் மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரைகளை பொலன்நறுவையில் இருந்து வந்த சிங்களவர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
அங்கு கால்நடைகள் கூட மேய முடியாத நிலை 400 சிங்களவர்களுக்கு 32 பௌத்த விகாரைகள் என திருகோணமலையில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின் 50% காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
கன்னியா , திருக்கோணேச்சரம் ,தையிட்டி . நிலாவரை ,கல்லடி மலைநீலியம்மன் ,இலங்கைத்துறை முகத்துவாரம் கந்தசுவாமி மலை ,குருந்தூர் மலை ,நீராவியடி , வெடுக்குநாறிமலை என ஒரு நீண்ட பட்டியலை தயாரித்து நீதிகோரிக்கொண்டிருக்கிறது தமிழ்ச்சமூகம் லங்காப்பட்டுண என பெயர் மாற்றப்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் என தமிழ்க்கிராமங்கள் பெயர் மாற்றப்பட்டுகொண்டிருக்கிறது.
தமிழர் தாயக நிலம் விழுங்கப்பட்டு முழுவீச்சில் பௌத்தமயமாக்கப்பட்டு மிகப்பெரும் ஆக்கிரமிப்பு நிகழும் மண்ணில் அரசியல் செய்யும் நீங்கள் உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக ஏனையவர்களை இனவாதிகளாகவும் மகிந்தவின் ஒட்டுண்ணிகள் எனவும் குறிப்பிடுகிறீர்கள்.
உண்மையில் உங்கள் சிகப்புச்சட்டையை களற்றி வெள்ளை ஆடை அணிந்தவுடன் உங்கள் கடந்த காலத்தை மறந்துபேனீர்களா ?
ஶ்ரீலங்காவின் அரச பயங்கரவாதம் ஈழத்தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்துக்கொண்டிருந்தபோது நிறுத்தாதீர்கள் கொல்லுங்கள் என கொழும்பின் வீதிகளில் கொடி பிடித்து திரிந்ததை மறந்து போனீர்களா ?
ஆட்சி கவிழ்க்கப்படும் அச்சத்தில் இருந்த இனப்படுகொலை அரசான ராஜபக்ச அரசை வீழ்ந்துவிடாது 2008 இல் தோள்கொடுத்து தாங்கிப்பிடித்ததை மறந்து போனீர்களா?
சிங்கள எல்லைக்கிராமங்களில் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த சிங்கள இளைஞர்களை வீடுவீடாகச்சென்று இனப்படுகொலைசெய்ய இராணுவத்தில் சேர்த்துவிட்ட புண்ணியச்செயலை மறந்து போனீர்களா?
சுனாமி பொதுக்கட்டமைப்பில் தமிழர்களுக்கு அவர்களின் கிராமங்களுக்கு உதவி கிடைக்ககூடாது என ஒற்றைக்காலில் நின்று அந்த நிதியை கெல்பிங் ஹம்பாந்தோட்ட என மகிந்த ராஜபக்ச அபகரித்துக்கொள்ள முழுக்காரணமாக நின்ற நீங்கள் நாட்டுக்குச்செய்த சேவையை மறந்து போனீர்களா?
எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களின் பூர்வீகத்தாயகத்தை பிரிக்க நீதிமன்றப்படியேறி விடாப்பிடியாக நின்று வெற்றிகொண்ட உங்கள் சரித்திரத்தை மறந்து போனீர்களா?
உண்மையில் யார் மகிந்தவின் ஒட்டுண்ணிகள்? உண்மையில் யார் இனவாதிகள்? உண்மையில் யார் ஊழல்வாதிகள்?
இந்த நாட்டை திவாலாக்கிய ராஜபக்சகளை கைதுசெய்ய திராணியற்ற அரசாங்கம் என எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வரும் பின்னணியில் கொடியபயங்கரவாத சட்டத்தை வைத்து தமிழ் இளைஞர்களை இன்றும் கைதுப்பூச்சாண்டி காட்டுவதை தவிர உங்கள் சாதனை என்ன என்ற கேள்வியும் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன?
இன்று இனவாதமில்லை சிங்களவர்களை குடியேற்றமாட்டோம் என நல்லபிள்ளைக்கு நடிக்கும் உங்கள் நாடகத்தை உங்கள் கடந்த காலத்தை அறிந்த யார் நம்புவார்?
வெளுத்தெல்லாம் வெண்ணையல்ல என்பதும் நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன என்பதையும் ஈழத்தமிழர்கள் நன்கறிவர்.
வடக்கில் கடந்த வருடம் நீங்கள் அபகரிக்க நினைத்து வர்த்தமானியிட்ட 5941 ஏக்கர்கள் எதற்காக என்று இன்றும் தமிழர் தரப்பில் கேள்விகள் வலுகின்றன.
உங்கள் கட்டுக்கதைகளை கண்மூடி ஏற்கிறோம் நீங்கள் இதுவரை ஈழத்தமிழர்களுக்கு செய்தது போதாதா?