மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல்
புதிய இணைப்பு
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பிரபல சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் (Kumar Ponnambalam) 25 ஆவது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் (Vavuniya) அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தால் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகையில் இன்றைய தினம் (05) இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
மலர் அஞ்சலி
சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சங்கத்தின் தலைவி காசிபிள்ளை ஜெயவனிதா ஈகை சுடரேற்றினார்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தி நினைவேந்தினர்.
முதலாம் இணைப்பு
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை யாழ் கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது .
இதன் பொழுது முதன்மை நிகழ்வாக மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் புதல்வனும் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது .தொடர்ந்து குமார் பொன்னம்பலத்தின் நினைவு உரைகள் இடம்பெற்றது.
இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலை
மக்கள் மயப்படுத்தவேண்டிய அரசியல்" எனும் தலைப்பில் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மேற்கொண்டார்.
இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ், யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம், பேராசிரியர்கள் , ஊடக நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள், பத்திரிகை பிரதம ஆசிரியர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குமார் பொன்னம்பலம் 2000 ஆண்டு ஜனவரி 5ம் திகதி கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |