3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புளத்சிங்கள, இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இன்று இரவு 8 மணி வரை இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பலத்த மழை
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் அஹலியகொட மற்றும் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்களும் மண்சரிவு, பாறைகள் சரிவு தொடர்பிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.