முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக தீவிரமடையும் சட்ட நடவடிக்கை!
“அரகலய” போராட்டத்தின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, 100 கோடிக்கும் அதிகமான இழப்பீடு பெற்றதாகக் கூறப்படும் 42 முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தயாராகியுள்ளது.
பொது மக்கள் நிதி மற்றும் பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததற்காக, முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் இது தொடர்புடைய விசாரணைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை கோப்புகள்
கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்களான நிமல் லான்சா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்திக்க அனுருத்த, மிலன் ஜயதிலக்க, பிரசன்ன ரணவீர, துமிந்த திசாநாயக்க, கனக ஹேரத், அருந்திக பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, அலி சப்ரி ரஹீம், கோகிலா குணவர்தன, சிறிபால கம்லத், டபிள்யூ.டி.வீரசிங்க, டி.பி.ஹேரத், ரமேஷ் பத்திரன, விமலவீர திசாநாயக்க, கீதா குமாரசிங்க, சம்பத் அத்துகோரல, ஜயந்த கெட்டகொட, விமல் வீரவன்ச, கபில நுவன் அதுகோரல, சீதா அரம்பேப்பொல, சஹான் பிரதீப், ஜனக பண்டார தென்னகோன், ரோஹித அபேகுணவர்தன, அசோக பிரியந்த, சந்திம வீரக்கொடி, அகில எல்லாவல, சன்ன ஜயசுமன, பியங்கர ஜயரத்ன, ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி, சமன்பிரியா ஹேரத், ஷெஹான் சேமசிங்க, பிரேமநாத் சி. தொலவத்த, குணபால ரட்ணசேகர, கெஹெலிய ரம்புக்வெல்ல, சாந்த பண்டார மற்றும் காலஞ்சென்ற காமினி லொக்குகே மற்றும் சனத் நிஷாந்த ஆகியோர் உள்ளடங்கலாக 42 பேர் தொடர்பாக தயாரிக்கப்பட்ட தனித்தனி விசாரணை கோப்புகள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சட்டப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், இது தொடர்புடைய விசாரணைக் கோப்புகள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மைகள் நீதிமன்றங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |