காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிவரும் சாட்சியங்கள் இழப்பு
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தக் காலப்பகுதியில் இராணுவத்தால் கடத்தப்பட்டும், வலிந்து கொண்டு செல்லப்பட்டும் கையளிக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிவரும் சாட்சியங்களும் இழக்கப்பட்டு வருகின்றன.
தமது உறவுகளை மீண்டும் காண்பதற்கோ அவர்கள் தொடர்பிலான தகவல்களை கண்டறிவதற்கோ முடியாத நிலையில் இதுவரை 115 உறவுகள் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி வரும் அவர்களது உறவினர்கள் பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து சொல்லெண்ணா துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து, வயோதிப ஓய்வு காலங்களில் நோய்வாய்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இவர்கள் இருந்து வருகின்றனர்.
எனினும் இதுவரை இவர்களுக்கான நீதியோ காணாமல் ஆக்கப்பட்டவர்களையோ கண்டுகொள்ள முடியாத நிலையில், அவல நிலை கண்ணீருக்கு மத்தியில் தொடர்கின்றது.
இவ்வாறு தமது உறவுகளை தேடியலைந்து இதுவரை 115 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டனர்.
இவர்களில் 15 பேர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அந்த மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை இவர்கள் வலியுறுத்திய போதிலும், அதனை அரசாங்கம் அலட்சியம் செய்திருந்த நிலையில், சர்வதேசத்திடம் நீதியை கோரி வருகின்றனர்.
எனினும் இதுவரை இவர்களுக்கான நீதி வழங்கப்படவில்லை. கொட்டும் மழையையும், வெயிலையும் பொருட்படுத்தாது தமது பிள்ளைகள், கணவன், மனைவி மற்றும் உறவினர்களுக்காக கொட்டில்களில் இருந்தபடியும், வீதிகளிலும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
சர்வதேச நாடுகளின் தலையீடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளும் மிகவும் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தமது உறவுகளுக்காக நீதி கோரிய 115 தாய் தந்தையர்கள் இறைபதம் அடைந்துவிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
