தேசிய தலைவரின் வீரவணக்க நிகழ்வு: லண்டனில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு
தேசிய தலைவரின் வீரவணக்க நிகழ்வுகள் தொடர்பாக, சர்வதேச ரீதியாக மக்கள் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 02.08.2025 அன்று சுவிஸ்லாந்து மண்ணில் நடைபெற இருக்கும் ஐரோப்பாவிற்கான ஒருங்கிணைந்த வீரவணக்க நிகழ்வுக்கு பலம் சேர்க்கும் வகையில் 13-07-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் லண்டன் கரோ பகுதியில் பிரித்தானியாவிற்கான மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது.
பொதுச்சுடர் ஏற்றல், தேசியக்கொடி ஏற்றல், மற்றும் ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகளுடன் சந்திப்பு ஆரம்பமாகியது.
தமிழ் மக்கள் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியம்
தொடர்ந்து அகவத்தின் நிர்வாகிகளினால், தேசிய தலைவருடைய வீரவணக்க நிகழ்வின் தேவையும், அதன் முக்கியத்துவமும் தெளிவுபடுத்தப்பட்டு, நிகழ்வு ஏற்பாடுகள் பற்றியும் அதில் உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.
தொடர்ந்து சந்திப்பில் கலந்து கொண்டு இருந்த உறவுகளின் பல்வேறு கரிசனை மிக்க ஆக்கபூர்வமான கேள்விகளுக்கும் தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டு, உறவுகளின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டது.
இந்த மக்கள் கலந்துரையாடலில் மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினர் ,தேசிய செயற்பாட்டாளர்கள் , மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற ஏற்பாடுகள்
இந்த மக்கள் சந்திப்பில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை அவர்களின் பகுதியிலேயே சந்தித்து தேசியத்தலைவரின் வீரவணக்க நிகழ்வு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தியிருந்தனர் .
ஆகவே எதிர் வரும் 02/08/2025 அன்று தமிழர்களின் அடையாளமாகவும், தமிழினத்தின் ஒப்பற்ற தலைவரும், தேசியத்தலைவருமான மேதகு வேலுப்பிளை பிரபாகரன் அவர்களது வீரவணக்க நிகழ்வு சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது .
இந்த வரலாற்று கடமை நிறைந்த நிகழ்வில் கலந்துகொண்டு, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த, உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து தமிழ்மக்களையும் ஒன்று கூடுமாறு உரிமையோடு அழைக்கிறார்கள் மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



