தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் திருத்தப்படவேண்டிய செயற்பாடுகள் (படங்கள்)
யாழ்.நல்லூரில் உள்ள தியாகி திலீபன் நினைவாலயத்தில் பொறுப்புணர்ச்சியற்ற செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக தேசப்பற்றுள்ள மக்கள் விசனப்பட்டுக் கொள்கின்றனர்.
செயல்வழி தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியவர்கள் தொடர்பில் அவர்கள் போல நடந்து கொள்ளலே நன்று. சொல்லாது செய்து காட்டுதலே வரவேற்கக் கூடியது.
திலீபன் நினைவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலும் திலீபனின் படத்திற்கு பின்னே தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களும் வெறுப்பை உணர்த்துவதாக அவர்கள் தங்கள் கவலையினை வெளிப்படுத்துகின்றனர்.
மக்கள் நலன் மிக்க பணிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்தவர் தியாகி திலீபன். இந்திய அமைதிப்படைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அகிம்சைப் போரினை பொறுப்பேற்று நடத்திய தளபதி.
செயல்வழியில் பேசும் இயல்புடைய நெறிவழி வந்த திலீபனின் நினைவாலயத்தில் சொல்லிச் செய்ய வைக்க முயல்வது பொருத்தமற்ற ஒரு செயற்பாடாக தாம் கருதுவதாக தமிழ்ப்பற்றுக் கொண்ட ஆர்வலர்கள் பலர் தங்கள் விசனத்தை வெளிப்படுத்துகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் பல முன்னேற்றகரமான மக்கள் நலன் மிக்க பணிகளை திலீபன் அன்று முன்னெடுத்திருந்தார்.எல்லோருக்கும் முன்மாதிரியாக அன்று அது அமைந்திருந்தது.
விடுதலைப் போரில் பங்கெடுத்து போரிட்ட போதும் துயருற்ற மக்களில் ஒருவராக நின்று மக்கள் நலன் சார்ந்து இயங்கிய ஒரு போராளி திலீபன் என திலீபனின் அரசியல் பணிகள் பற்றி தான் கண்ணுற்ற விடயங்களின் நினைவுகள் வழியில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் நல்லூரில் வாழ்ந்து வரும் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர்.
இளம் வயதில் உண்ணா விரதம் இருக்க முன்வந்ததும் அதனை இறுதிவரை உறுதியாக பின் பற்றிக் கொண்டதும் இன்றளவும் தமக்கு ஆச்சரியமளிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பன்னிரண்டு நாள் உண்ணாவிரதம் இருந்து தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து அகிம்சைவழியில் ஆகுதியான திலீபனை நினைவு கொள்ள வடிவமைக்கப்பட்டதே யாழ்.நல்லூரில் உள்ள திலீபன் நினைவாலயம்.
குப்பை போடுதலை தவிர்க்கவும்
நல்லூர் முருகன் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள ஐஸ்கிறிம் நிலையமொன்றிற்கு செல்லும் வளைவில் இந்த நினைவாலயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தியாகி திலீபனின் நினைவாலயத்தின் வாயிற் கதவில் வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்டு பொலித்தீனால் உறையிடப்பட்டுள்ள ஒரு அறிவித்தல் வைக்கப்பட்டுள்ளது.
" தயவுசெய்து இந்த புனித இடத்தில் வாகனங்களை நிறுத்துதல் மற்றும் குப்பை போடுதலை தவிர்க்கவும்" என மும் மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல் இன்றி புரிதலோடு இவற்றை மக்கள் செய்யாதிருக்கும்படி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தான் பொருத்தமானதாக இருக்கும் என தமிழ் உணர்வாளர்கள் சிலர் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.
நினைவாலயம் உள்ள இடத்திற்கு செல்லும் போது பாதணிகளை கழற்றி விட்டு அதனுள் செல்ல வேண்டும் என்ற உணர்வை அந்த நினைவாலயத்தின் அமைப்பியல் ஏற்படுத்த வேண்டும். குறுகிய இடம் என்பது பிரச்சினையல்ல.சிந்திக்கப்படவில்லை என்பதே இப்போதுள்ள பிரச்சினை.
எந்தவொரு இடமும் அதன் அமைப்பு முறையிலும் பராமரிக்கப்படும் முறையிலும் தான் புனிதமாக மதிக்கப்பட மனிதர்களின் மனங்களை அது தூண்டிவிடுகின்றது.
புனிதமாக போற்றப்படும் தகுதியுடைய செயற்பாட்டை புரிந்தவர் தியாகி திலீபன்.அவரது நினைவிடமும் அப்படியே புனிதமாகவும் மதிக்கப்படும்படியும் கட்டமைக்கப்படும் போது அவ்விடத்திற்கு வரும் மக்களுக்கு அது வெள்ளிடை மலையாகிப் போகும்.
நினைவாலயம் மீதான மதிப்பு
புனிமான இடமாக உணர்த்தப்படும் போது வாகனங்களை நிறுத்துவதும் அதனருகே குப்பைகளை போடுதலும் தானாகவே தவிர்க்கப்பட்டுப் போகும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் யாழ்ப்பாணத்து வாழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் வேண்டும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
யாழ்.நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள திலீபனின் படத்திற்கு பின்னாக ஊதுபத்தி,கற்பூரப்பை ஒன்று தொங்க விடப்பட்டுள்ளது.
நினைவிடத்திற்கு அருகில் உள்ள ஐஸ்கிறிம் நிலையத்திற்கு வந்து போகும் மக்களின் வாகனகனத் தரிப்பிடம் நினைவாலயத்திற்கு பின்னாக அமைந்துள்ளது.
அங்கிருந்து பார்க்கும் போது இந்த ஊதுபத்தி கற்பூரப்பை நினைவாலயம் மீதான மதிப்பை கெடுக்கிறது என குறித்த ஐஸ்கிறிம் இல்லத்திற்கு வந்திருந்த எழுத்தாளர் ஒருவருடன் நினைவாலயம் பற்றிய அவரது கருத்துக்களைக் கேட்ட போது சுட்டிக்காட்டியமை குறிப்பிட்டிருந்தார்.
திலீபனின் நினைவாலயம் யாழ்.நல்லூரில் இருப்பதாக அறிந்த போதும் பல தடவை நல்லூர் கோவிலுக்கு வந்து போன போதும் இந்த நினைவாலயத்தினை இனம் கண்டு கொள்ளமுடியவில்லை. அதற்காக மற்றொருவரின் உதவி தேவைப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இளம் எழுத்தாளராக திகழும் அவரிடம் தியாகி திலீபனின் தியாகம் தொடர்பில் அளவிட முடியாத வியப்பும் மரியாதையும் இருந்ததினை அவருடன் பேசும்போது அவதானிக்க முடிந்ததுள்ளது.
தியாகத்தின் புனிதத்தை புரிந்திடச் செய்தல்
மேலும், திருவுருவப்படத்திற்கு பின்னாக துடைக்கப் பயன்படும் பழைய துணியொன்றும் கற்பூரம், ஊதுபத்தி, தீப்பெட்டி கொண்ட பொலித்தீன் பையொன்றும் காணப்படுகிறது.
தியாகி திலீபனின் நினைவாலயத்தை பார்த்ததும் பிடித்துப் போகும்படி அமைப்பதன் மூலம் மக்களிடையே தியாகி திலீபனின் தியாகத்தின் புனிதத்தை புரிந்திடச் செய்யலாம் என மக்களிடையே பொதுவான கருத்து நிலவுவதனையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.
தியாகி திலீபன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அந்நாளைய உண்ணாவிரத நிகழ்வின் போதான மக்கள் எழுச்சியையும் உணர்வின் வலிமையும் இன்றும் எடுத்துக்கூறுவதோடு அந்நாளைய நிகழ்வு என்றென்றும் போற்றப்பட வேண்டும் எனவும் தங்கள் உள்ளார்ந்த விருப்பத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.
நிபுணத்துவ வெளிப்பாட்டோடு தமிழ் மணம் கமழும் வகையில் நினைவாலயத்தினை பொலிவுறச் செய்வதனால் இலங்கை வந்து செல்லும் வெளிநாட்டவர்களின் மனங்களிலும் இளைய தமிழ் சமூகத்தவர் எண்ணங்களிலும் அந்த தியாகத்தின் மகிமையை புரிந்து போற்றும் நிலை தோன்றிவிடும்.
ஈழத்தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்காக ஆயுதங்களை ஏந்திய போதும் அகிம்சை வழியிலும் பயணிக்க உறுதியோடு இருந்ததும் அதன்வழி நடந்ததும் நாளைவரும் சந்ததிகளுக்கு எடுத்தியம்பும் நல்லதொரு இடமாக தியாகி திலீபனின் நினைவாலயம் அமையும் என்பது திண்ணம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |