யாழ்ப்பாணம் - இவர் வந்தால் என்ன - வராவிட்டால் தான் என்ன
நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொள்கிறார்.
இதன்போது தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் தொடர்பிலும், நீண்ட காலமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் தொடர்பிலும் பல்வேறுபட்ட தரப்பினரை மைத்திரிபால சிறிசேன இவ்விஜயத்தின்போது சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நல்லது, தமிழ் மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த இவருக்கு இப்படியொரு வரவேற்பு. இவர் வந்தால்தான் என்ன வராவிட்டால் தான் என்ன என கேட்கிறார்கள் தமிழ்மக்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்
அவரது விஜயத்தின்போது தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் நீண்டகாலமாக சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரை சந்திக்கப்போகிறாராம். நிறைவேற்று அதிகாரம் என்ற ஒன்றை வைத்து ஐந்து வருடங்கள் ஆட்சி அதிகாரத்தை நடத்தி தமிழரின் இனப்பிரச்சினையை தீர்க்க பொன்னான வாய்ப்பு கிடைத்திருந்தும் அதனை தட்டி தூக்கியெறிந்து விட்டு தற்போது வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் வந்து என்னத்தை கிழிக்க போகிறார் என கேட்கிறார்கள் தமிழ் மக்கள்.
தனது ஆட்சி அதிகார இறுதி தருணத்தில் கொலைக்குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு பொதுமன்னிப்பு வழங்கியதை ஒருவேளை இவரது சாதனையாக கொள்ளலாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதற்கு தான் பொறுப்பல்ல என அசால்டாக ஒரு முப்படைதளபதியாக இருந்தவர் தெரிவிப்பதை மற்றுமொரு சாதனையாக கொள்ளலாம்.
வலிவடக்கில் விகாரைகள்
இவர் தனது விஜயத்தின்போது யாழ்ப்பாணத்தில் வலிவடக்கில் இரண்டு விகாரைகள் அத்து மீறி கட்டப்பட்டுள்ளன. அதனை அகற்றுவாரா? வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை மீட்டு கொடுப்பாரா?குருந்தூர் மலையில் தமிழ் மக்களின் பிரதேசத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி கட்டப்பட்டுள்ள விகாரையை அகற்ற உத்தரவிடுவாரா? எதைச் செய்வதற்கு பல்வேறு தரப்பினருடன் இவர் கலந்துரையாடல் நடத்தவுள்ளார் என கேட்கின்றனர் தமிழ் மக்கள்.
தனது கட்சியிலிருந்து சென்று அரசில் அமைச்சுப்பதவி வகித்தவர்களுக்கெதிராகவே நடவடிக்கை எடுக்க திராணியற்றவராக இருக்கும் இவரா தமிழர் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்போகிறார்.
கெட்டு குட்டிச்சுவராகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சி
இவரது காலத்திலேயே சிறிலங்கா சுதந்திரக்கட்சி என்பது கெட்டு குட்டிச்சுவராகி போனதும், பொதுஜன பெரமுன என்ற கட்சியை ராஜபக்சாக்கள் உருவாக்க அடித்தளமிட்டதும் கடந்த கால வரலாறு.
தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழர் இனப்பிரச்சினையை தீர்த்திருந்தால் காலம் என்றும் அவரை நினைவில் வைத்திருக்கும். இன்று அவர் வந்தால் என்ன? வராவிட்டால் தான் என்ன என கேட்கின்றனர் தமிழ் மக்கள்?
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)