எரிபொருள் நிலைய முகாமையாளரின் திருட்டுதனம் அம்பலம்
மின்துண்டிப்பு நேரம் இடம்பெற்ற திருட்டு
கடந்த 36 நாட்களாக எரிபொருளின்றி மூடப்பட்டிருந்த மகொன எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் இன்று (16) இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டவேளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து 25 லீற்றர் பெட்ரோலை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற போது பிடிபட்டார்.
கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி முதல் மக்கொன சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் விநியோகிக்கப்படவில்லை எனவும், நிலத்தடி தாங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் இவ்வாறு எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் மறைத்து வைப்பு
மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர் முச்சக்கரவண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து பிளாஸ்டிக் கானில் 25 லீற்றர் பெட்ரோலை உரப்பையால் மூடி முச்சக்கரவண்டியின் பின்னால் மறைத்து வைத்துள்ளார்.
பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் பேருவளை, மாகல்கந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் நிலத்தடி தாங்கிகளில் உள்ள பெட்ரோலை வழங்குமாறு பெருந்தொகையான மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து காவல்துறையினர் சோதனையின் போது 200 லீற்றர்களை கண்டுபிடித்து விநியோகம் செய்துள்ளனர்.
