தமிழீழ போராட்ட வரலாற்றில் வீரச்சாவினை தழுவிய மாவீரர்களை நினைவு கூரும் புலம்பெயர்தேசம்
கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்றது போல தமிழீழ போராட்ட வரலாற்றில் வீரச்சாவினை தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும் மற்றும் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவு கூர்ந்து உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் மாதாந்த நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது கடந்த ஞாயிற்று கிழமை(31.03.2024) அன்று மாலை 3.00 மணி அளவில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கடந்த (28.02.2024) அன்று தமிழகத்தில் சாவடைந்த "மாவீரன் சாந்தன்" அவர்களுடைய தியாகமும் நினைவு கூறப்பட்டுள்ளது.
தமிழீழ தேசியக் கொடி
குயிலினி,கொட்வின், துவாரகா மற்றும் பகலவன் ஆகியோர் பொதுச்சுடர் ஏற்ற நிகழ்வுகள் தமிழீழ தேசியக் கொடியினை இசைவதனி ஏற்ற மேற்படி நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
பொது மாவீரருக்கான ஈகைச்சுடரினை துக்சி ஏற்ற மலர் மாலையினை ஜெசிந்தா அணிவித்ததோடு தொடர்ந்து மாவீரன் சாந்தனருடைய திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை குணா ஏற்ற மலர் மாலையினை ஆறுமுகம் அணிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த உரித்துடையோர்கள் தமது மாவீரர் சொந்தங்களுக்கு ஈகைச் சுடரேற்றி மலர்வணக்கம் செய்தனர்.
விடுதலை புலி
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் நிதி பொறுப்பாளரும் படைத்துறை செயலாருமான கேணல்.தமிழேந்திக்கு செவ்வாணன் மற்றும் தாஸ் ஆகியோரும் கப்டன் திருவுடைய திருவுருவப்படத்திற்கு அவரது சகோதரர் ஜேம்ஸ் குடும்பத்தினரும், லெப்.கேணல் வானதியின் திருவுருவப்படத்திற்கு வினோதன் குடும்பத்தினரும் மற்றும் வீரவேங்கை வதனனினுடைய திருவுருவப்படத்திற்கு அவரது உறவினர் திருமதி.வீரன் குடும்பத்தினரும் வீரவணக்கத்தினை தெரிவித்தனர்.
அத்தோடு வீரவேங்கை ஜெயசக்தி அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு அவரது சகோதரன் சுசீலன் குடும்பத்தினரும், லெப்.செந்தாளன் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு அவரது சகோதரர்கள் திரு.இலக்கியன், மற்றும் திரு.ஜெயனோகரன் ஆகியோரும், கப்டன் நிவேதனுடைய திருவுருவப்படத்திற்கு அவரது பெறாமகன் திகழும் மற்றும் லெப்.சித்தாவின் திருவுருவப்படத்திற்கு அவரது சகோதரி திருமதி.உதயராணி குடும்பத்தினரும் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.
மலர் வணக்கம்
அவர்களைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளும் அங்கு நிரைப்படுத்தப்பட்டிருந்த மாவீரர்களுடைய திருவுருவப் படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்து தமது வீரவணக்கத்தினை தெரிவித்தனர்.
"தாய் மண்ணை முத்தமிட வேண்டும்" என்ற பாடலுக்கு இளையவர்கள் யுகேசனா திவாகரன், வியிலி சிவதாஸ் ஆகியோர் நடனத்தை வழங்கியிருந்தார்கள்.
மாவீரர் எழுச்சி பாடல்களை மைக்கல், சுரேஷ் மற்றும் விகேசனா திவாகரன் ஆகியோர் வழங்க நினைவுரைகளை புரட்சி மற்றும் ரூபன் ஆகியோர் வழங்கி இருந்தார்கள். மாவீரர் பணிமனை ஏற்பாட்டில் உணர்வழிச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்வு உறுதி ஏற்புடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |