மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிப்பது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று(04) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆறாம் திகதி ஆரம்பமாகி 11 நாட்கள் நடைபெற்ற நிலையில் 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்டன.
அகழ்வுப்பணிகள்
இதனை தொடர்ந்து தற்காலிகமான இடைநிறுத்தப்பட்ட அகழ்வுப்பணிகள் மீண்டும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தமாக 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டது.
இந்த அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் எனப்படும் வருடி பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டிருந்தது.
விசாரணை
இதனையடுத்து குறித்த அகழ்வுப்பணி கடந்த மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நிதி கிடைக்கப்பறாமையினால் இன்றைய தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள் தொடர்பான வழக்கு இன்று(04) முல்லைத்தீவு நீதவான் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது அகழ்வு பணியினை நடாத்த இன்னும் நிதி கிடைக்கபெறவில்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது அகழ்வுப் பணிக்கென போடப்பட்டுள்ள பாதீடு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றில் கூறியுள்ளார்.
மனித புதைகுழி
இதனால் பாதீட்டை சீர்செய்து அனுப்பி நிதியினை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து குறித்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |