தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
கொடிகாமத்தில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் கொடிகாமம் நகர மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளைத் தலைவர் செல்வரத்தினம் மயூரன் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள், முச்சக்கரவண்டிச் சங்கத்தினர், தனியார் சிற்றூர்திச் சங்கத்தினர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நினைவேந்தலின் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் பகிரப்பட்டது.
அம்பாறையில்
அம்பாறை மாவட்ட தமிழ் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், நாவிதன்வெளி பிரதேசபை முன்னாள் உறுப்பினர் தர்சினி, போராளிகள் குடும்ப உறவுகள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மாவீரர் பெற்றோரினால் முள்ளிவாய்க்கால் நினைவுப் பொதுச் சுடரேற்றப்பட்டதுடன், வருகைதந்தோரினால் சுடர்கள் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
அம்பாறை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக நிகழ்வுகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் அவலங்களைக் காட்சிப்படுத்தும் பதாதைகள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இன்றைய இரண்டாவது நாளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (17) புதன்கிழமை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.
இதன் பொழுது பொதுமக்கள், வர்ததகர்கள், சாரதிகள் உட்பட அனைவருக்கும் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், தமிழரசுக் கட்சியின் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அதேநேரம், மன்னார் தோட்டவெளி பகுதியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தோட்டவெளி பகுதி மக்களால் ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது.
அருட்தந்தைகள், பொதுமக்கள் உட்பட பலரும் இணைந்து உணர்வு பூர்வமாக குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில்
தமிழினப் படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும் , முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்றைய தினம்(17) முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மெசிடோ நிறுவனத்தின் அனுசரணையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, அடம்பன் பகுதியில் தமிழினப் படுகொலை அஞ்சலி நிகழ்வுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.
அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்ட பகுதிகளில் தமிழினப் படுகொலை நினைவு நாள் மே -18 எனும் தொனிப்பொருளில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, வெள்ளைக்கொடி மற்றும் வெள்ளை நிற தோரணங்கள் பறக்கவிடப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் மற்றும் கஞ்சி வழங்கும் நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் மெசிடே நிறுவன பணியாளர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
