கடன் பிரச்சினை - இளம்குடும்பஸ்தர் கொடூரமாக வெட்டிக் கொலை!
நீர் கொழும்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் நீர் கொழும்பில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
29 வயதுடைய அன்ரனி றொபேட் என்ற இளம் குடும்பத் தலைவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் தனது மனைவியுடன் வேலைக்குச் செல்ல ஆயத்தமானபோது முகமூடி அணிந்து கூரிய ஆயுதங்களுடன் காரில் வந்தவர்கள் வீட்டுக்குள் புகுந்து அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உயிரிழந்தவரின் மனைவி
சம்பவத்தில் வெட்டுக்காயங்களுடன் குருதி வெள்ளத்தில் கிடந்த அவர், அயலவர்களின் உதவியுடன் உடனடியாக நீர் கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த உயிரிழந்தவரின் மனைவி (வயது -25) மயக்க மடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொலைக்குக் காரணம்
இந்த இளம் தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் இடம்பெற்றபோது குறித்த குழந்தை அயல் வீடான தாத்தாவின் (உயிரிழந்தவரின் தந்தை) வீட்டில் இருந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடன் பகையே இந்தக் கொலைக்குக் காரணம் என்று காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
