25 வயது இளம் யுவதி மர்ம மரணம் - படுகொலையே என சந்தேகம்..!
இரத்தினபுரி பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் யுவதியின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குறித்த யுவதியின் மரணம் மாரடைப்பினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்த யுவதியின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இரத்தினபுரி, நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த சச்சினி ஜினாதாரி என்ற 25 வயதுடைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
கால்வாயிலிருந்து சடலம்
மாரடைப்பினால் யுவதி மரணமடைந்திருப்பின் வேலைக்கு சென்ற பாதையில் சடலமாக மீட்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் 200 கிலோ மீட்டர் தூரத்தில் எவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்றும் உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
யுவதியின் கைத்தொலைபேசி நீண்ட நேரமாக தேடப்பட்டு வந்த நிலையில் பின்னர் உயிரிழந்த இடத்திற்கு அருகில் காணப்பட்டதாகவும்,கொலைக்கு காரணமானவர்கள் தொலைப்பேசியை இவ்விடத்தில் பின்னர் வீசியிருக்கலாம் எனவும், உரிய அதிகாரிகள் மரணம் தொடர்பான விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரத்தினபுரி நிரியெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய சச்சினி ஜினாதாரி என்ற பெண்ணின் சடலம் கடந்த 27ஆம் திகதி அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
பல்கலைக்கழக படிப்பை முடித்த சச்சினி, இரத்தினபுரியின் ஹிடெல்லானா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல் காலை வேலைக்கு சென்ற யுவதி குறித்த தகவல் கிடைக்காததால், குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து நடத்திய தேடுதலில் அவரது சடலம் கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
