மகிந்த வீட்டை விட்டு வெளியேற தயார் : நாமல் திட்டவட்ட அறிவிப்பு
வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வீட்டை விட்டு வெளியேறுவார் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்றையதினம் (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேங்காய் தட்டுப்பாட்டுக்குக்கும், மின்விநியோக துண்டிப்புக்கும் குரங்குகள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது, குரங்குகள் மீது இந்த அரசாங்கத்துக்கு ஏன் இந்தளவுக்கு வெறுப்பு என்பது தெரியவில்லை.
ஆடம்பரமான இல்லங்கள்
மின்சாரத்துறை அமைச்சரின் பொறுப்பற்ற கூற்று அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.
எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் மக்கள் மத்தியில் பொய்யுரைத்ததை போன்று தற்போது பொய்யுரைக்காமல் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தொகுதி மற்றும் ஆசன மட்டத்தில் தேர்தல் பிரச்சார கூட்டங்களை எதிர்வரும் மாதம் முதல் நடத்துவோம்.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை கிராமத்துக்கு கிராமம் எடுத்துரைப்போம், கடந்த அரசாங்கங்களின் நிர்வாகத்தை விமர்சித்தே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.
போலியான குற்றச்சாட்டு
ஆகவே, இப்போதும் கடந்த காலத்தை போன்று போலியான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல் சிறந்த முறையில் செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு சிவில் அமைப்பினர் குறிப்பிட வேண்டியதில்லை.
வீட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தேவையுமில்லை.
வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மகிந்த ராஜபக்ச வீட்டை விட்டு வெளியேறுவார்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)