பைடனுக்கு பதிலடி - பாரிய ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா
வேகமெடுக்கும் கொரோனா தொற்று மற்றும் உலக நாடுகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் வடகொரியா தற்போது அமெரிக்க அதிபர் ஜப்பான் சென்று திரும்பிய நிலையில் மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் அமெரிக்கா, வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளபோது வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டிற்காக சென்றிருந்தார். அங்கு அவர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிவிட்டு புறப்பட்ட சில மணி நேரத்திற்குள் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கியுள்ளது.
இன்று அதிகாலை ஜப்பான் கடல்பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் மூன்று ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
பியோங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான இடைவெளியில் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக சியோலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏவுகணை சோதனை நடத்தப்பட்ட பின்னர் கூட்டப்பட்ட கூட்டத்தில், தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்த சோதனையை "கடுமையான ஆத்திரமூட்டல்" என்று அந்நாட்டின் அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை புதன்கிழமை குறைந்தது இரண்டு ஏவுகணை சோதனைகள் நடந்ததாக ஜப்பான் உறுதிப்படுத்தியது, ஆனால் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்டது.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நோபுவோ கிஷி கூறுகையில், முதல் ஏவுகணை சுமார் 300 கிமீ (186 மைல்கள்) அதிகபட்சமாக 550 கிமீ உயரத்திற்கு சென்றது, இரண்டாவது, 50 கிமீ உயரத்தை எட்டி, 750 கிமீ வரை பயணித்தது எனத் தெரிவித்தார்.
இந்த ஏவுகணை சோதனைகளை "ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் விமர்சித்தார், மேலும் இது "ஜப்பான் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும்" என்றும் கூறினார்.
