வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் இயந்திர கோளாறால் ஏற்பட்ட விபரீதம்!
நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் கனரக வாகன சாரதி படுகாயமடைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலன்னறுவையிலிருந்து வெலிமடை, பதுளை மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அரிசி விநியோகிப்பதற்காக சென்ற கனரக வாகனம் செங்குத்தான பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் மோதி விபத்து
இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டையிழந்த கனரக வாகனம் வீடொன்றுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதால் வீட்டில் மோதி வீட்டுக்கும் பலத்த சேதமேற்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது வீட்டினுள் யாரும் இருக்கவில்லை எனவும் அதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லையெனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணை
இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





