வீட்டை முற்றுமுழுதாக விழுங்கிவிட்டுள்ள விசச் செடி! கோபத்தில் உறுப்பினர்கள்!!
வீடு உள்ள வளவுக்குள் விசச் செடிகள் முளைத்துவிட்டால் அவற்றினை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். அது மட்டுமல்ல, மறுபடியும் விசச் செடிகள் துளிர்விடாமல் இருப்பதற்கு எண்ணெய், கிருமி நாசினிகளை அந்த இடத்தில் அடிக்கடி ஊற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.
தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் பதவியில் சுமந்திரன் ஏறி அமர்ந்து, தமிழரசுக் கட்சியை ஆக்கிரமித்துவிட்டுள்ளதை இப்படித்தான் பார்க்கின்றார்கள் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள்.
"தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகள் எவருமே மக்களின் ஆதரவைப் பெறாதவர்கள். சிலர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். ஆனால் திட்டமிட்ட சதிகள் ஊடாக கட்சியைக் கைப்பற்றி, மத்தியகுழு உறுப்பினர்களை வளைத்துப்பிடித்து, மக்களிடம் செல்லாமல் பின் கதவால் நாடாளுமன்றம் செல்லும் ஒரு சதிதான் இந்த நடவடிக்கை''என்று தெரிவித்தார் மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.
நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூடம் பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், ‘சுமந்திரன் அதிகாரம் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்கமாட்டார். ராஜதந்திரிகளைச் சந்திப்பதானாலும் சரி, கட்சி சார்பாகப் பேச்சுவார்தைகளில் ஈடுபடுவதானாலும் சரி, தன்னைத் தவிர வேறு யாரும் செல்லக்கூடாது என்ற நிலைப்பாடு கொண்டவர். அப்படிப்பட்ட எண்ணம் கொண்ட சுமந்திரனை இம்முறை தமிழ் மக்கள் நிராகரித்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மக்களின் ஆதரவுடன் அவரால் இனிமேல் நாடாளுமன்றம் செல்லவே முடியாது. அதனால் பின் கதவால் நாடாளுமன்றம் செல்லும் ஒரு நகர்வின் ஆரம்பம்தான் இந்தப் பதவி விவகாரம்' என்று அவர் தெரிவித்தார்.
‘சுமந்திரன் ஒருபோதும் பின்கதவால் நடாளுமன்றம் செல்லமாட்டார். தேசியப் பட்டியல் உறுப்பினராக அவர் நாடாளுமன்றம் சென்றால், அவர் இறந்ததற்குச் சமன். மறுபடியும் மக்கள் முன்பு சென்று, ஜெயித்துத்தான் அவர் நாடாளுமன்றம் செல்லுவார்’ என்று உறுதியாகத் தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் ஒரு மத்தியகுழு உறுப்பினர்.
நேற்று நடைபெற்ற மத்தியகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மற்றுமொரு சிரேஷ்ட உறுப்பினரிடம், நேற்றைய கூட்டம் பற்றி அவருடைய கருத்தைக் கேட்டோம்:
‘தற்பொழுது கட்சியின் செயலாளர் அவர். தலைவர் அவரது கைப்பிள்ளை. மத்திய குழு உறுப்பினர்களில் பலர் அவரது கைத்தடிகள். கிழக்குக்குத் தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று கூறி, மல்லியை விரைவில் தலைவராக்கிவிடுவார்கள். சங்குக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் என்று குற்றம் சுமத்தி எஞ்சியிருக்கும் தமிழ் தேசியவாதிகளையெல்லாம் ஓரம்கட்டி வெளியேற்றிவிடுவார்கள். தொடர் வழங்குகளால் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் சிறீதரன் போன்றவர்களால் வெளியில் இருந்து கூச்சல்போடமுடியுமே தவிர, வேறு எதுவுமே செய்யமுடியாது.
இதுதான் தமிழரசுக் கட்சியின் இன்றைய நிலமை.
வீடு முழுவதும் விசச்செடி முற்றாகப் பரவிவிட்டால், வீட்டை எரித்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு' என்று கோபத்துடன் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
