இன ஒடுக்குமுறையின் குரூரத்தை உணர்த்தும் யாழ் நூலக எரிப்பு
Courtesy: தீபச்செல்வன்
புத்தகங்கள் மீதே இப்படி வன்முறை கொள்பவர்கள் எனில் சனங்கள் மீது எப்படி வன்முறை கொள்வார்கள் என்பதற்கு சாட்சியே யாழ் நூலகம்.
சில வருடங்களின் முன்னர் சர்வதேச எழுத்தாளர் ஒருவரும் சிங்கள எழுத்தாளர் ஒருவரும் வீட்டிற்கு வந்திருந்தனர்.இலக்கியங்கள் குறித்தும் கவிதைகள் குறித்தும் பேசிக் கொண்டிருக்கையில், யாழ் நூலக எரிப்பு குறித்தும் உரையாடிக் கொண்டிருந்தோம்.
ஈழத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளும் படுகொலைகளும் சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களைத் தாண்டி அறியப்படாத ஒரு காலம் இருந்தது என்று கூறிய அச் சர்வதேச எழுத்தாளர், யாழ் நூலகத்தில் தொண்ணூற்று ஏழாயிரம் புத்தகங்களை அழிக்கும் போதுகூட நாம் அறிவுக் கண் அற்றவர்களாக இருந்திருக்கிறோம் என்று ஆதங்கத்துடன் பேசியிருந்தார்.ஈழத் தமிழர் மீதான இன ஒடுக்குமுறையின் குரூரத்தை இந்த உலகம் புரிந்துகொள்ள யாழ் நூலக எரிப்பு ஒன்றே போதும் என்றும் சிங்கள எழுத்தாளர் தன் கருத்தைப் பகிர்ந்தார்.
நூலகம் ஒரு கோயில்
எந்தவொரு சமூகத்திலும் புத்தகங்களும் நூல் நிலையங்களும் ஒரு ஆலயத்தைப் போலவும் மருத்துவமனைபோலவும் பாடசாலை போலவும் மகத்துவமான இடங்களில் ஒன்றாக மதிக்கப்படுகின்றது.
பெரும்பான்மை வாதம் கடுமையாக நிலவும் இலங்கைத் தீவில், தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளில் மேற்குறித்த இடங்கள் எல்லாமே போர்த் தாக்குதல்களின் போது இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஒரு சமூகத்தை முற்று முழுதாக அழித்தொழிக்கின்ற நன்கு திட்டமிட்ட செயல்களின் வெளிப்பாடாகவே இத்தகைய தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன என்பதற்கு யாழ் நூலக அழிப்பு நிகழ்வு மிகப் பொருத்தமான உதாரணம்.
இலங்கையில், தமிழ் மக்கள் தமது தாயகமாக கொண்டு வாழ்கின்ற வடக்கு கிழக்கில் குறிப்பாக அதிக தமிழ் மக்கள் தொகையினரை கொண்ட யாழ்ப்பாண நகர் பண்பாடும் மரபுரிமை அடையாளங்களும் நிறைந்த பகுதியாகவும். தமிழ் இராசதானி ஆட்சி வழியாக உலகம் எங்கும் நன்கு அறியப்பட்ட யாழ் நகரம் பண்பாட்டின் அடையாளமாகவும் அறிவின் அடையாளமாகவும் திகழ்வதை உலகின் பிரசித்தமான அறிஞர்கள் பலரும் விதந்துரைத்துள்ளனர்.
அத்தகைய யாழ்ப்பாணத்தின் அடையாளமாகவே யாழ் நூலகம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.
பழமை மிக்க ஓலைச்சுவடிகள்
இலங்கை தமிழ் மக்கள் மாத்திரமின்றி, தமிழ்நாடு, இந்தியா மற்றும் மேற்கு நாடுகள்கூட ஆசியாவின் மிகச் சிறந்த நூலகம் என யாழ் நூலகத்தைப் போற்றி வந்தனர்.அங்கு தமிழின் மிக அரிய நூல்களும் பழமை மிக்க ஓலைச்சுவடிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் முது அறிஞர்கள் மாத்திரமின்றி இலங்கையில் செல்வாக்கு வெலுத்திய பிரித்தானிய மற்றும் மேற்க்கத்தைய அறிஞர்களின் அறிவுச் செல்வங்களும் யாழ் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டமை, அதன் சர்வதே தரத்தை அதிகரித்தது.
இந்த நிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் இன ரீதியான ஒடுக்குமுறைகள் மற்றும் தாக்குதல்களை சந்தித்த காலத்தில் அவர்கள் முகம் கொண்ட பெரும் இழப்பாகவும் அழிப்பாகவும் யாழ் நூலக அழிப்பு இடம்பெற்றது.
1980களில் இலங்கையில் இனத்துவரீதியாக பெரும்பான்மையினரின் கடும்போக்கு வாத தாக்குதல்கள் பல மட்டங்களிலும் இடம்பெற்றது. இதன் ஒரு பகுதியாக, தமிழ் சமூகத்தின் அறிவையும் கல்வியையும் பண்பாட்டு அடையாளத்தையும் அழிக்க வேண்டும் என்ற நன்கு திட்டமிட்ட நடவடிக்கையாக யாழ் நூலக அழிப்பு நிகழ்த்தப்பட்டது.
இதனால் யாழ் நூலகத்தில் சேகரிக்கப்பட்ட 97 ஆயிரம் அரிய வகை நூல்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.
காமினியும் சிறில் மத்தியூவுமா எரியூட்டியது
1981 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர், அதாவது ஜூன் 1ஆம் திகதி அதிகாலையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவை ஜனாதிபதியாக கொண்ட இலங்கை அரசின் அமைச்சர்களான காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ முதலியோர் தலைமையிலான குழுவினர் இவ் அழிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
ஜூன் 2ஆம் நாள் வரை நூலக அழிப்பு இடம்பெற்றது. ஒரு அரசு, தனது திணைக்களத்தின் கீழ் உள்ள நூலகத்தை அமைச்சர்களே சகிதமாக எரியூட்டுகின்றனர் எனில் அங்கே எத்தகைய இனவாதமும் பாகுபாடும் பேரினவாத மேலாண்மையும் நிலவுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இன்று யாழ் நூலகம் வெள்ளையடிக்கப்பட்டாலும் அதன் உள்ளே எரிவின் சாம்பல்கள் படிந்திருப்பதுபோல, தமிழ் மக்களின் மனங்களிலும் அழியாத அந்த வடு ஒரு காயமாகவே இருக்கின்றது.
இந்த சம்பவத்திற்கு வெளிப்படையாக மன்னிப்பு கோர வேண்டிய பொறுப்பை இலங்கை அரசு தட்டிக்கழித்து வருகின்றது.
தற்போது இந்த நூலகம் எரியூட்டப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துள்ளன. மூன்று தசாப்தங்கள் கடந்துள்ளன. இன்றும் தமிழர்களின் பண்பாட்டின் மீதும் அடையாளங்கள் மீதும் தாக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் பெரும்பான்மையின ஆதிக்கங்களும் தொடர்கின்றன.
புத்தகங்கள் மீதும் வன்முறை
புத்தகங்கள் மீதும் நூலகங்கள் மீதும் வன்முறையை செலுத்தும் போர் தொடுக்கும் அரசு ஒன்று அப் பிராந்தியத்தை சேர்ந்த மக்களை எப்படி நடாத்தும் எப்படி கையாளும் என்பதையும் பன்னாட்டு சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுபோன்ற அறிவுமீதான அழிப்புக்கள் இவ் உலகின் எந்த மூலையிலும் இனிவரும் காலத்தில் இடம்பெறக்கூடாது என்பது தமிழர்களின் ஏக்கம். அத்துடன் இவைகளுக்கான நீதியும் இனி இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாதிருக்க வேண்டிய ஏற்பாடுகளும் அவசியம்.
இங்கே நினைவு கொள்ளல் என்பது, தமிழ் சமூகத்தின் மீதான பாதுகாப்பாகவும் ஆற்றுப்படுத்தலாகவும் அமைய வேண்டும். இதற்கான பொறுப்பை பன்னாட்டு சமூகம் உணர்ந்து குரல் கொடுக்க இனியும் பின்நிற்கக்கூடாது.
அறிவாலும் ஆற்றலாலும் அறியப்பட்ட ஒரு இனத்தை அழித்து ஒழித்துவிட வேண்டும் என்ற பேரினவாத சிந்தனையின் ஆதிக்கத்தின் வெளிப்பாடாக அமைந்துவிட்ட யாழ் நூலக எரிப்பு அறிவழிப்பின் பேரதிர்ச்சியை நம் இனத்திற்கு அளித்துவிட்டது என்பது வரலாற்று நிகழ்வு.
நம் அறிவுப் பண்பாட்டையும் வரலாற்றையும் சாம்பலாக்கும் இம் முயற்சிகளின் எரி காயங்களில் இருந்தே ஈழ மண்ணின் வரலாறுயும் கதைகளும் எழுதப்படுகின்றன.
சாம்பலாக்கப்பட்ட புத்தகங்களில் நமது கதைகளும் கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன. யாழ் நூலக எரிப்புக்கு பிறகு, ஈழத்தில் எல்லாப் புத்தகங்களிலும் சாம்பலம் கொட்டிக் கொண்டே இருக்கின்றன.
நாம் படிக்க வேண்டிய புத்தகங்கள்
எமது மண்ணின் தலைமுறைகள், எமது மண்ணின் மனிதர்கள் எமது புத்தகங்களையும் எமக்கு தேவையான புத்தகங்களையும் படிக்க கூடாது என்பதில் இலங்கை அரசு தெளிவாக இருக்கிறது.
இலங்கை அரசும், சிங்களப் பேரினவாதிகளும் சொல்லித் தரும் கதைகளையும் வரலாற்றையும் படிக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அல்லது அவர்களின் ஞானஸ்தானம் பெற்ற தமிழ் புலி எதிர்ப்பு படைப்பாளிகளின் நூல்களை படிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
போராளிகளை கொச்சைப்படுத்துகின்ற தமிழ் தேசத்திற்கு எதிரான சிங்கள அரசுக்கு துணை செய்கின்ற எழுத்துக்களையும் நாம் இனம் கண்டு அணுக வேண்டும். அந்தப் புத்தகங்களையும் படிக்கத்தான் வேண்டும்.
அன்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழீழத்திற்கு எதிரான இலக்கியங்களும் இதழ்களும் கூட அனுமதிக்கப்பட்டது தான்.
அவைகளை எதிர்கொள்ளும் விதமான இலக்கிய ஆக்கங்களின் தேவைகளையும் நாம் உணர்ந்து படைப்பதும் யாழ் நூலக எரிப்பு, மற்றும் நூல்களின் தமிழ் தேசியத்தை சரிப்பது போன்ற அநீதிகளை எதிர்கொள்ளவதற்கான வழி.அன்று யாழ் நூலக எரிப்பு எமது போராட்டத்தை வலுப்படுத்தியது.
புத்தகங்களைப் பெருக்கியது. நாம் சாம்பலாகிவிடாமல், புதிய பக்கங்கள் எழுதப்படுகின்றன. புதிய புத்தகங்கள் எழுதப்படுகின்றன. புதிய நூலகங்கள் உருவாக்கப்படுகின்றன.
ஏனெனில், அறிவாலும் போராடி உலகை வெல்ல வேண்டும் என்ற சிந்தனை விதைக்கப்பட்ட மண் இது. அறிவின் ஆயுதமாக எழுச்சியின் கருவிகளாக புத்தகங்கள் பெருகட்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 29 May, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.