போதகர் ஜெரோம் தொடர்பில் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
மதங்களுக்கு இடையில் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்திருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இலங்கை திரும்பியதும் கைது செய்யப்படுவார் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா இன்று தெரிவித்துள்ளார்.
போதகர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பௌத்த மதம் குறித்து அண்மையில் அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அவர் நாடு திரும்பியதும் கைது செய்யப்படவுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தல்துவ தெரிவித்துள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் பயணத் தடை
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் பயணத் தடையைப் பெற்றுள்ளது. இருப்பினும், மே 14, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று போதகர் நாட்டை விட்டு வெளியேறினார் என்பது தெரியவந்தது.
போதகர் பெர்னாண்டோ, புத்தர், இஸ்லாம் மற்றும் இந்து மதம் தொடர்பான இழிவான கருத்துக்களை அண்மையில் வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரது கருத்துகளின் காணொளி காட்சிகள் நாட்டில் உள்ள பௌத்த மதத்தை பின்பற்றுபவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் அறிவிப்பு
இதேவேளை போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க பாதிரியாரோ அல்லது இலங்கை கத்தோலிக்க திருச்சபையுடன் தொடர்புபட்டவரோ இல்லை என கொழும்பு பேராயர் அலுவலகம் நேற்று தெளிவுபடுத்தியுள்ளது.
