மட்டக்களப்பில் தொடருந்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!
மட்டக்களப்பு திறாய்மடு பகுதியில் தொடருந்தை நிறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் ஒரு மணி நேரமாக இந்த போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
மட்டக்களப்பில் இருந்து சென்று கொண்டிருந்த தொடருந்தை திறாய்மடு பகுதியில் மக்கள் ஒன்றிணைந்து நிறுத்தியுள்ளதுடன், அவ்விடத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
மக்களின் கோரிக்கை
திறாய்மடு பகுதியில் பல வருட காலமாக தொடருந்து தண்டவாளத்தின் குறுக்கே உள்ள வீதியை மக்கள் பயன்படுத்தி வந்திருந்த நிலையில், அந்த தொடருந்து கடவையூடான குறுக்கு வீதியை மூடியமையே இந்த போராட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் பதாதைகளுடன் சுமார் ஒரு மணி நேரமாக குறித்த போராட்டம் இடம்பெற்ற நிலையில், குறித்த இடத்திற்கு கொக்குவில் காவல்துறையினரும் வருகை தந்திருந்தனர்.
பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்தை விடுவிக்குமாறு காவல்துறையினர் மக்களிடம் கோரிக்கை விடுத்த போதும் மக்கள் தமது போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
தாம் பல வருட காலமாக செல்லும் வீதியை மீண்டும் கையளிக்க வேண்டும் என்பதே இந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.


