வவுனியா போக்குவரத்து சபையால் பெட்ரோல் விநியோகம்
பெட்ரோல் விநியோகம்
வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் அத்தியாவசிய சேவையை சீராக முன்னெடுப்பதற்காக அரசாங்க அதிபரின் அனுமதியுடன் பரல்களில் 300 லீட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் 161 தொழிலாளர்கள் கடமையாற்றுவதுடன், அவர்களது தனிப்பட்ட வாகனங்களில் கடமைக்கு செல்வதற்கு எரிபொருள் இன்மையினால் பேருந்து சேவைகளை சீரான முறையில் நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரிபொருள் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக 161 தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கென 400 லீட்டர் பெட்ரோல் வழங்குமாறு அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியிருந்தார்.
இதனால் வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் நேற்று (12) இ.போ.சபை வவுனியா சாலைக்கு 300 லீட்டர் பெட்ரோல் பரல்களில் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.
இ.போ.சபை வவுனியா சாலை சாரதிகள், காப்பாளர்கள், பொறியலாளர்கள், உத்தியோகத்தர்கள் செட்டிகுளத்திலிருந்து அல்லது அதற்கு அண்மையிலுள்ள பிரதேசத்திலிருந்து வருகின்றனர்.
அது மட்டுமில்லாமல் சாளம்பைக்குளம், பம்பைமடு, நாகர்இலுப்பைக்குளம், ஓமந்தை, பூனாவ, இராசேந்திரகுளம், வீரபுரம், பூவரசன்குளம், சிதம்பரபுரம், முருகனூர் போன்ற இடங்களிலிருந்து வருகின்றார்கள். இதை விட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பருத்தித்துறை இடத்திலிருந்தும் கிழக்கு மாகாணத்திலிருந்தும் வந்து கடமை செய்கின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது .
அத்துடன் பாடசாலை சேவை, தபால் சேவை, பொது மக்களுக்கான சேவை மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் சேவை என்பன இ.போ.சபை வவுனியா சாலையினர் முன்னெடுத்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டே பரல்களில் எரிபொருள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.