இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள்!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன் எழுதுகோலினால் பெரும் பங்களிப்புச் செய்த ஈழத்தின் தேசிய கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்தநாள் நேற்றாகும்.
ஈழ இலக்கிய வரலாற்றில் கவிஞராக மிளிரும் இவர் பாடலாசிரியர் மற்றும் சிற்பக் கலைஞர் ஆவார். விடுதலைப் போராட்டப் பயணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுப் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார்.
2009 ஆம் ஆண்டு ஈழப் போர் முடிவில் காணாமல் போனார். இன்றுவரை அவரின் குடும்பத்தினர் அவரைத் தேடிக்கொண்டுள்ளனர்.
வரதலிங்கம் இரத்தினதுரை என்ற இயற்பெயரைக் கொண்ட புதுவை இரத்தினதுரை 1948 ஆம் ஆண்டு திசம்பர் 3 ஆம் நாள் யாழ்ப்பாண மாவட்டம், புத்தூரில் பிறந்தார். தனது 14வது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். '
வியாசன்', 'மாலிகா' போன்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் மற்றும் ஈழப் புரட்சிப் பாடல்களை எழுதியுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் கலை மற்றும் பண்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராகச் செயற்பட்டார்.
தமிழ்த் தேசிய உணர்வுமிக்க பல புரட்சிகரப் பாடல்களை எழுதியதன் மூலம் ஈழத் தமிழர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.
புதுவையின் நூல்கள்
01. வானம் சிவக்கிறது (1970)
02. இரத்த புஷ்பங்கள்(1980)
03. ஒரு தோழனின் காதற் கடிதம்
04. நினைவழியா நாட்கள்
05. உலைக்களம்
06. பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்
"இந்த மண் எங்களின் சொந்த மண்", "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே" (மாவீரர் துயிலுமில்லப் பாடல்), "ஏறுது பார் கொடி", "பாதைகள் வளையாது எங்கள் பயணங்கள் முடியாது" முதலிய பாடல்கள் இன்று ஈழ நிலத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
1995இல் யாழ் இடப்பெயர்வின் போது இவர் எழுதிய "பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது" என்ற பாடல், பி.பி.சி நடத்திய உலகின் சிறந்த பத்து பாடல்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. புதுவை இரத்தினதுரை எழுதிய இப்பாடலுக்கு முரளியின் இசையில், திருமலைச் சந்திரன் பாடியுள்ளார்.
இந்தப் பாடல் விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் தயாரித்த "முகங்கள்" திரைப்படத்தில் இடம்பெற்றது. தனிநாட்டுக்கான அசைக்க முடியாத உறுதியையும், இலட்சியத்தையும் வலியுறுத்திய புதுவையின் பாடல்கள் விடுதலைப் போரில் உயிர்நீத்த போராளிகளின் வீரச்சாவையும், அவர்களது தியாகத்தின் முக்கியத்துவத்தையும் போற்றின.
மாவீரர் நாள் நிகழ்வுகளில் பாடப்படும் "மொழியாகி எங்கள் மூச்சாகி..." போன்ற பாடல்கள் ஈழத் தமிழ் மக்களின் இதயத்தில் ஒலிக்கும் நிரந்தரப் பாடலாகும்.
படைப்புக்கள்
அதேவேளை போராட்டத்தின் நியாயத்தை சிங்கள மக்களை நோக்கி எடுத்துரைக்கும் வகையிலும் அவரது படைப்புக்கள் அமைந்தன. சிங்களப் பெரும்பான்மை அரசாங்கத்தின் பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை கவிதைகளும் பாடல்களும் பேசின.
“நிலமிழந்து போனால் பலமிழந்து போகும் பலமிழந்து போனால் இனம் அழந்து போகும் ஆதலால் மானுடனே ! தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்” மேற்கண்ட வரிகள் மூலம், தமிழ் மண்ணின் முக்கியத்துவத்தையும், அது இழக்கப்பட்டால் இனம் அழிக்கப்படும் என்ற கருத்தையும் தன் படைப்புக்களில் புதுவை ஆழமாக விதைத்தார்.
இன்றும் அவை பொருந்துகின்றன. இன்றும் இளைய தலைமுறைகூட அவரது வரிகளைப் படிக்கின்றனர்.
“ஊர் பிரிந்தோம் ஏதும் எடுக்கவில்லை அகப்பட்ட கொஞ்சம் அரிசி, பருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து, மனைவியின் மாற்றுடுப்பு மூன்று, காற்றுப் போய்க்கிடந்த மிதிவண்டி, காணியுறுதி, அடையாள அட்டை அவ்வளவே, புறப்பட்டு விட்டோம்.
இப்போ உணருகிறேன் உலகில் தாளாத துயரெது? ஊரிழந்து போதல் தான்.” எனும் புதுவையின் வரிகள் இடப்பெயர்வின் துயரத்தை போரின் கொடிய முகத்தைப் பேசகின்றது.
"வாழ்வையும் எழுத்தையும் வகைபிரித்து அதுவேறு, இதுவேறு எனச் சொல்லும் இரட்டை வாழ்வு எனக்கென்றுமே இருந்ததில்லை. மற்றவருக்குச் சொல்ல முன்னர் நானே என் எழுத்துக்கு உயிருள்ள சாட்சியமாக இருக்க விரும்புகின்றேன்.
இதனாற்றான் விடுதலையை அவாவுறும் கூட்டத்திலொருவனாய் என் வாழ்வு அர்த்தமுடன் கழிகிறது." என்று குறிப்பிட்ட புதுவை இரத்தினதுரை அந்த இலக்கணத்தின்படியே வாழ்ந்தார். இன்று உலகம் முழுவதும் புதுவையின் பாடல்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தின் சாட்சியமாக ஒலிக்கின்றன.
புரட்சிப் பாடல்கள்
தமிழ்நாட்டில்கூட சினிமாப் பாடல்களைக் கடந்து புதுவை எழுதிய புரட்சிப் பாடல்கள் இளைய தலைமுறையால் கொண்டாப்படுகின்றன. “எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பில் நான் வரவில்லை.
ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில் கலைப் பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது.
இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று புதுவை கூறியபடி கலை இலக்கியம் மற்றும் பண்பாடு சார்ந்தப் பணியை சிறப்பாக ஆற்றினார்.
இவரது தலைமையின் கீழ் வெளிவந்த வெளிச்சம் இதழ் விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழ் தேசியம் சார்ந்த இலக்கியப் படைப்புக்களை போர் நிலத்தில் இருந்து வெளி உலகிற்கு எடுத்துச்சென்றன.
இதனால் பல போராளிகளும் பொதுசனப் படைப்பாளிகளும் போர் மற்றும் அதற்கு எதிரான விடுதலை சார்ந்து பல படைப்புக்களை எழுதினார்கள்.
வெளிச்சத்தில் எழுதாத படைப்பாளிகள் இல்லை என்று கூறலாம். வெளிச்சம் பல சிறுகதை, கவிதை நூல்களையும் வெளியிட்டது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்தபோது, பல சிரேஷ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் சேர்ந்து புதுவை இரத்தினதுரையும் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார்.
அதன் பின்னர் அவரது நிலைமை என்ன ஆனது என்பது இன்றுவரை அறியப்படவில்லை. அவர் இலங்கை இராணுவத்தின் காவலில் காணாமல் ஆக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |