அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் பாதுகாப்பு - அநுர அரசின் மாற்றம்
எதிர்வரும் தேர்தலின் பின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் அமைச்சர்களுக்கு நான்கு மெய்ப்பாதுகாவலர்கள் மாத்திரமே வழங்கப்படவுள்ளனர்.
அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களை மாத்திரம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு மாத்திரம் இந்த எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் அமைச்சர் ஒருவருக்கு 7-10 பாதுகாப்பு அதிகாரிகளும் , நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 5-7 பாதுகாப்பு அதிகாரிகளும் வழங்கப்பட்டிருந்தன.
நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை அதற்காக நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு, எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்று தேசிய மக்கள் சக்தி அறிவித்திருந்த நிலையில், தற்போது அதன் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |